மதுரை: முக்கிய சாலை சந்திப்புகளில் ஒரு பஸ் நிற்கும் அளவுக்கு கம்புகளை நட்டு போடப்பட்டுள்ள ‘நிழல் பந்தல்’களாலும், சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் போடப்பட்டுள்ள ‘நிழல் பந்தல்’களாலும் மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
மதுரை மாநகரப் பகுதிகளில் உள்ள சாலைகள், வாகனப் போக்குவரத்துக்கு தகுந்தார்போல் விசாலமாக இல்லாமல் குறுகலாக உள்ளன. இந்த நிலையில், ஒவ்வொரு போக்குவரத்து சிக்கனல்களிலும் நான்கு சாலைகள் சந்திப்பதால், வாகன ஓட்டிகள் சாலைகளை கடந்து செல்வதற்கான சிக்னல் விழுவதற்கு குறைந்தப்பட்சம் 5 நிமிடங்கள் வரை ஆகிறது. ஆனால், சாலைகளில் நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் காத்திருப்பதால் ஒரு போக்குவரத்து சிக்னலை கடப்பதற்கு வாகன ஓட்டிகள் குறைந்தப்பட்சம் 10 நிமிடங்கள் முதல் அதிகப்பட்சம் 15 நிமிடங்கள் வரை ஆகிறது.
தற்போது மாநகரப் பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரிப்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகளால் நீண்ட நேரம் போக்குவரத்து சிக்னல் பகுதிகளில் காத்திருக்க முடியவில்லை. வாகன ஓட்டிகளுக்கு மயக்கம் வருகிற அளவிற்கு கோடை வெப்பமும், வெயிலின் தாக்கமும் மிக அதிகமாக உள்ளது. இரு சக்கர வாகன ஓட்டிகளை இந்த வெயிலில் இருந்து பாதுகாக்க, நகரின் பல்வேறு இடங்களில் முக்கிய சாலை சந்திப்புகளில் உள்ளூர் மாநகர சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் போக்குவரத்து சிக்னல்களில் ‘நிழல் பந்தல்’கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிழல் பந்தல்களை முழுமையாக போடாமல், பெயரளவுக்கு ஒரு பஸ் நிற்கிற அளவிற்கே போட்டுள்ளனர். ஏற்கெனவே நகரச்சாலைகள் மிக குறுகலாக உள்ளன. இதில், கம்புகளை நட்டு மிக சிறியளவில் இந்த பந்தல்களை அமைத்துள்ளதால் இண்டு கார்கள் அல்லது ஒரு பஸ் வந்து நின்றால் இரு சக்கர வாகன ஓட்டிகள் இந்த நிழல் பந்தலில் நிற்க முடியாது. அவர்கள் வழக்கம்போலவே வெயிலில் சிக்னல் விழும் வரை காத்திருக்க வேண்டியதாக உள்ளது. பஸ், கார்களில் அமர்ந்திருப்பவர்களுக்கு நிழல் பந்தலால் ஒரு பயனும் இல்லை. அவர்களுக்கு நிழல் பந்தலின் நிழலும் அவசியமில்லை. ஆனால், இரு சக்கர வாகன ஓட்டிகளுக்காகதான் இந்த நிழல் பந்தல் அமைக்கப்படுகிறது.
ஆனால், அவர்கள் நிற்பதற்கு முழுமையாக பந்தல்களை போடாமல் கடமைக்கு தங்கள் பெயரையும், கட்சியையும் முன்னிலைப்படுத்தும் வகையில் நகரச்சாலைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் நிழல் பந்தல்கள் அமைத்துள்ளனர். இந்த நிழல் பந்தல்களுக்காக, சாலையின் இரு புறமும், நடுவிலும் கம்புகளை நட்டுள்ளனர். இந்த கம்புகள், சாலையின் குறிப்பிட்ட பகுதியை ஆக்கிரமித்து கொண்டதால், சிக்னல் விழுந்ததும் அதிக வாகனங்கள் போக்குவரத்து சிக்னல்களை கடந்து செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஒரே நேரத்தில் இந்த பந்தல்களை தாண்டி இரு சக்கர வாகன ஓட்டிகள் ஒருவரை ஒருவர் முண்டியடித்து செல்லும்போது இந்த நிழல் பந்தல்களால் சிறு விபத்துகளும் ஏற்படுகின்றன. கடமைக்கு தங்கள் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சிக்னல்களை தங்கள் பெயரை முன்னிலைப்படுத்துவதற்காகவே இந்த நிழல் பந்தல்களை சட்டமன்ற உறுப்பினர்கள் அமைத்துள்ளதுபோல் தெரிகிறது.
மாநகர காவல் துறையும், மாநகராட்சியும், இதுபோல் கடமைக்கு அமைக்கப்பட்ட நிழல் பந்தல்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை அணுகி இந்த நிழல் பந்தல்களை கூடுதல் தொலைவிற்கு அமைக்கவும், நிழல் பந்தல் போட்ட சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கிறார்கள்.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘நிழல் பந்தல்கள் வாகன ஓட்டிகள் நிழலில் நிற்பதற்காக அமைக்கப்படுகிறது என்பதை தாண்டி இவர்கள், விளம்பரத்திற்காக அமைத்துள்ளனர். இந்த பந்தல்களை எதற்காக அமைக்கிறோம் என்ற நோக்கமே இல்லாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் இந்த கோடை வெயிலில் சாலைகளை கடந்து செல்ல முடியாமல் நிழல் பந்தல்கள் மூலம் போக்குவரத்து சிக்னல்களை செயற்கை தடையை ஏற்படுத்தியுள்ளனர்,
கார்கள், இரு சக்கர வாகனங்கள் மோதினால் இந்த நிழல் பந்தல்கள் கீழே விழுந்து விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால், மாநகர முக்கிய சாலைகளில் பாதுகாப்பு இல்லாமல் போக்குவரத்து இடையூறாக உள்ள இந்த நிழல் பந்தல்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.