அமைச்சர் துரைமுருகன் | கோப்புப்படம் 
தமிழகம்

பேரவையில் கால் இடறி கீழே விழுந்த துரைமுருகன் - விரைந்து வந்து நலம் விசாரித்த முதல்வர்!

ச.கார்த்திகேயன்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.26) கால் இடறி அமைச்சர் துரைமுருகன் கீழே விழுந்தார். தகவல் அறிந்து முதல்வர் ஸ்டாலின் பேரவைக்கு விரைந்து வந்து, துரைமுருகனிடம் நலம் விசாரித்தார்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட்ட கூட்டத்தொடர் வரும் ஏப்.29-ம் தேதியுடன் நிறைவடைகிறது. சனிக்கிழமை கேள்வி நேரத்தின்போது பல்வேறு துறை அமைச்சர்கள் பதில் அளித்துக் கொண்டிருந்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துக் கொண்டிருந்தபோது, அமைச்சர் துரைமுருகன் தனது இருக்கையில் இருந்து எழுந்து வெளியில் செல்ல முயன்றார். அவர் இரு மேசைகளுக்கு இடையே குறுகலான வழியில் நுழைந்து செல்லும்போது காலை சுமார் 10.28 மணி அளவில் கால் இடறி கீழே விழுந்தார்.

அதை பார்த்ததும் கட்சி பேதமின்றி உறுப்பினர்கள் அனைவரும் பதறியபடி அவரை நோக்கி சென்றனர். பின்னர் அவரை தூக்கி நிற்க வைத்தனர். அதன் பின்னர் அவராகவே நடந்து வந்து, தனது இருக்கையில் அமர்ந்து, குடிநீர் அருந்தினர். அப்போது அருகில் அமர்ந்திருந்த உதயநிதி, ‘இப்போது உடல் எப்படி இருக்கிறது?’ என துரைமுருகனிடம் கேட்டறிந்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த முதல்வர் ஸ்டாலின், துரைமுருகனிடம் நலம் விசாரித்தார். ‘ஏன் அப்படி நேரிட்டது?’ என கேள்வி எழுப்பினார். அப்போது துரைமுருகன், தான் நலமாக இருப்பதாகவும், எழுந்து சென்றபோது கால் இடறி கீழே விழுந்துவிட்டதாகவும் விளக்கினார். இதனால் அவையில் சிறிது நேரம் அமைதி நிலவியது. பின்னர், அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது பதிலுரையைத் தொடர்ந்தார்.

SCROLL FOR NEXT