தமிழகம்

கோவையில் விரைவில் 'உலக புத்தொழில் மாநாடு' - சிறப்பு இணையதளத்தை தொடங்கி வைத்தார் உதயநிதி

தமிழினி

சென்னை: கோயம்புத்தூரில் நடைபெற உள்ள “உலக புத்தொழில் மாநாடு - 2025” கான இலச்சினையை வெளியிட்டு, மாநாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு இணையதளத்தினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் சார்பில் கோயம்புத்தூரில் நடைபெற உள்ள “உலக புத்தொழில் மாநாடு -2025” க்கான இலச்சினையை வெளியிட்டு, மாநாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு இணையதளத்தினை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டினை தொழில்துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்கும் வகையில் இளைஞர்கள் புதிய தொழில்களை தொடங்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்திற்கு, புத்துயிர் ஊட்டி அதன் செயல்பாடுகளை விரிவு படுத்தியுள்ளார்.

அதன் காரணமாக தமிழ்நாட்டிலிருந்து பதிவு செய்யப்படும் புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2021-ம் ஆண்டு வரை 2,032 ஆக இருந்தது தற்போது 4 மடங்கிற்கும் மேல் அதிகரித்து 10,800-ஐ கடந்துள்ளது. 2021-ம் ஆண்டு முதல் தற்போது வரை மட்டும் 8,000 க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் சுமார் 49% நிறுவனங்கள் பெண்களால் நடத்தப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கதாகும். 2030-ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்திட வேண்டும் என்ற உயர்ந்த இலக்கை அடைய புத்தொழில் துறை வளர்ச்சி ஒரு சாதனைக் குறியீடாகத் திகழ்கிறது.

தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சமமான வளர்ச்சி என்ற முதல்வரின் இலக்கினை நோக்கமாக கொண்டு கடந்த 4 ஆண்டுகளில் சென்னை, மதுரை, ஈரோடு, திருநெல்வேலி, ஓசூர், சேலம், கடலூர், தஞ்சாவூர், கோவை, திருச்சி ஆகிய 10 நகரங்களில் வட்டாரப் புத்தொழில் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் புத்தொழில் நிறுவனங்களை உலகத் தரத்தில் மேம்படுத்தும் முயற்சியாக கோயமுத்தூரில் உள்ள கொடிசியா வளாகத்தில் "உலக புத்தொழில் மாநாடு -2025" என்ற மாபெரும் நிகழ்வினை தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் விரைவில் நடத்த உள்ளது.

இந்த உலக புத்தொழில் மாநாடு -2025 ல் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புத்தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் புத்தொழில் சூழமைவு செயல்பாட்டாளர்களை 30,000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்க செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் இம்மாநாட்டினையொட்டி விண்வெளித் தொழில்நுட்பம், காலநிலை மாற்ற மேலாண்மை, மின் வாகனத் தொழில்நுட்பம், வேளாண் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புத்தொழில் நிறுவனங்கள், அரசுத்துறைகள், பெரு நிறுவனங்கள், தொழில் வளர் காப்பகங்கள் பங்கேற்கும் 750 அரங்குகளை கொண்ட மாபெரும் புத்தொழில் கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது.

மாநாட்டினையொட்டி அறிவுசார் கருத்தரங்குகள், சந்தை வாய்ப்புகளை உருவாக்க விற்பனையாளர்- வாடிக்கையாளர் சந்திப்புகள், முதலீட்டாளர் சந்திப்புகள், புத்தாக்க காட்சி அரங்கம் ஆகிய நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன. உலக புத்தொழில் மாநாடு - 2025 க்கான இணையதளமானது மாநாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள், உரையாளர்கள் குறித்த தகவல்கள், கண்காட்சி அரங்கம் குறித்த விபரங்கள் தெரிந்து கொள்ள வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநாட்டிற்கு வருகை புரிபவர்கள் எளிமையாக பதிவு செய்யவும், முப்பரிமாண வசதியுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கும் அரங்க அமைப்பினை பார்வையிட்டு தங்களுக்கான அரங்குகளை பதிவு மேற்கொள்ளும் வகையிலும் இணையதளம் வடிமைக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT