எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம் 
தமிழகம்

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு ரத்து!

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக திமுக எம்.பி தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, மத்திய சென்னை திமுக எம்.பி தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருந்தார். இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி - எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘ஏற்கெனவே செய்தித்தாள்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் பேசினேன். தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசும் பேச்சுக்கள் அவதூறு ஆகாது. எனவே, எனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT