சென்னை: கல்லூரிகளில் 'மாபெரும் தமிழ்க் கனவு' நிகழ்ச்சிகள் ரூ.3 கோடி செலவில் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உயர்கல்வித் துறையில் மேற்கொள்ள உள்ள திட்டங்கள் குறித்து 2025-26-ஆண்டுக்கான உத்தேச அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
உயர்தனிச் செம்மொழியான தமிழின் தொன்மையினையும் அதன் இலக்கியச் சிறப்புகளையும் சமூக சமத்துவத்தின் அவசியத்தையும் பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் 200 கல்லூரிகளில் அறிஞர்களின் சொற்பொழிவுகள், வல்லுநர்களின் குழு விவாதங்களுடன் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும். இதற்காக ரூ.3 கோடி செலவினம் ஏற்படும்.
அனைத்து அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளின் முகப்பினை மேம்படுத்தும் விதமாக, அனைத்து கல்லூரிகளிலும் பசுமைத் தோற்ற முகப்பு அமைத்தல், முகப்பினைப் புதுப்பித்தல் மற்றும் அனைத்துக் கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான கல்லூரிப் பெயர் பலகைகள் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக கல்லூரிகளில் பராமரிக்கப்பட்டு வரும் நிதியிலிருந்து தலா ரூ.5 இலட்சம் செலவினம் மேற்கொள்ளப்படும்.
மாணாக்கர்களின் பன்முகத்திறனை கண்டறிந்து, அவற்றை ஊக்குவிக்கும் விதமாக 164 அரசு கலை மற்றும் அறிவியல், 7 அரசு கல்வியியல், 11 அரசு பொறியியல், 54 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் 16 அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் என மொத்தம் 252 கல்லூரிகளில் ஆண்டுதோறும் கல்லூரிக் கலைத் திருவிழா நடத்தப்படும். இதற்கென கல்லூரிக்கு ரூ.2 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.5.04 கோடி செலவினம் ஏற்படும்.
கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் விளையாட்டு திறனை வெளிப்படுத்தவும், உடல் நலனை காக்கவும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து 164 அரசு கலை மற்றும் அறிவியல், 7 அரசு கல்வியியல், 11 அரசு பொறியியல், 54 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் 16 அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் என மொத்தம் 252 கல்லூரிகளில் விளையாட்டு வசதிகள் மேம்படுத்தப்படும். இதற்கென கல்லூரிக்கு ரூ.1.5 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.3.78 கோடி செலவினம் ஏற்படும்.
பல்வேறு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்கள், தொழில்துறை பங்குதாரர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களிடமிருந்து அப்பகுதிகளின் தேவைக்கேற்ப புதிய பாடப்பிரிவுகள் துவங்கிட கோரிக்கைகள் பெறப்பட்டு வருகின்றன. அக்கோரிக்கைகளைப் பரிசீலித்து கல்லூரிகளுக்குத் தேவைப்படும் புதிய பாடப்பிரிவுகளைப் பரிந்துரை செய்திட ஏதுவாக, இணை இயக்குநர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் பாட வல்லுநர்களைக் கொண்ட பாடப்பிரிவு பரிசீலனைக் குழு அமைக்கப்படும்.