மதுரை: தமிழகத்தில் நேரடி உதவி காவல் ஆய்வாளர்கள் பணிக்கான கல்வித் தகுதி கட்டுப்பாடுகளை நீக்கக் கோரிய வழக்கில், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் பதில் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை வண்டியூரைச் சேர்ந்த கோபால், இப்ராஹிம் கலிபுல்லா, சுரேஷ் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் 1,299 உதவி காவல் ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஏப்.4-ம் தேதி வெளியிட்டது.
இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாகவே விண்ணப்பிக்க முடியும். அறிவிப்பாணையில் 9-ம் வகுப்பு படிக்காமல் நேரடியாக 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ் 1 படிக்காமல் நேடியாக பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இது இயற்கை நீதிக்கு எதிரானது. அவ்வாறு படித்தவர்கள் நேரடியாகத் தேர்வு எழுதித்தான் வெற்றிபெற்றுள்ளனர்.
எனவே, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் உதவி காவல் ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க விதிக்கப்பட்ட கல்வித்தகுதி கட்டுப்பாடுகளை நீக்கி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், "கடந்த முறை காவல் உதவி ஆய்வாளர்கள் பணித் தேர்வில் நேரடியாக 10-ம் வகுப்பு படித்தவர்களை தேர்வு செய்துள்ளனர். இந்தாண்டு முதல் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, இந்தக் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும்" என வாதிடப்பட்டது.
அரசுத் தரப்பில், "இதே கோரிக்கையுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதே கோரிக்கை தொடர்பான பொதுநல மனு, மதுரை அமர்வில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் நலன் கருதியே அறிவிப்பாணையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதி, "அரசுதான் பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் வழங்கியுள்ளது. பின்னர் அதன் அடிப்படையில் பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியில்லை எனக் கூறவது ஏன்? மனுதாரர்களை காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும். மனு தொடர்பாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையச் செயலர் பதில் அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.