தமிழகம்

2026-ல் அதிமுக ஆட்சி அமைவது உறுதி: மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் இபிஎஸ் திட்டவட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி 2026-ல் அதிமுக ஆட்சி அமையும் என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்த நிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது. கட்சி எம்எல்ஏக்களை உற்சாகப்படுத்தும் விதமாக கடந்த ஏப்.23-ம் தேதி, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில், அதிமுக எம்எல்ஏக்கள் அனைவருக்கும் அசைவ விருந்தளித்தார் பொதுச்செயலாளர் பழனிசாமி. இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தையும் கூட்டியுள்ளார். வரும் மே 2-ம் தேதி கட்சி செயற்குழு கூட்டத்தையும் கூட்டியுள்ளார்.

முன்னதாக, சட்டப்பேரவை தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தவும், தேர்தல் ஆயத்த பணிகளை விரைந்து முடிக்கவும், கட்சி ரீதியிலான 82 மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்களை கடந்த பிப்.17-ம் தேதி பழனிசாமி நியமித்தார்.

அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று, ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள உறுப்பினர் அட்டைகள் அனைவரையும் சென்று சேர்ந்ததா என்பதை கண்காணிக்கவும், கட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட விளையாட்டு வீரர் அணியில் ஊராட்சி, நகரம், பேரூராட்சி, மாநகராட்சி வார்டு அளவில் அதிக எண்ணிகையில் உறுப்பினர்களை சேர்க்கவும் அறிவுறுத்தி இருந்தார்.

மேலும் பூத் கிளை பொறுப்பாளர்களை 100 சதவீதம் நியமித்து, அது தொடர்பான விவரங்களை மார்ச் 31-ம் தேதிக்குள் கட்சி தலைமையிடம், மாவட்ட பொறுப்பாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பூத் கிளை நிர்வாகிகள் நியமனம் குறித்து மாவட்ட பொறுப்பாளர்களிடம் பழனிசாமி கேட்டறிந்தார். இதில் சில பொறுப்பாளர்கள் இன்னும் 100 சதவீதம் பூத் கிளை நிர்வாகிகளை நியமிக்கவில்லை. அதை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். பின்னர் அவர் கூட்டத்தில் பேசியதாவது:

வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான, அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இணைந்துள்ளது. இது நல்ல தொடக்கம். தேர்தல் நெருங்க நெருங்க மேலும் பல கட்சிகள் இந்த கூட்டணியில் இணையும். திமுக அரசு மீதான மக்களின் அதிருப்தியும், அதிமுக தலைமையிலான வலுவான கூட்டணியும், அதிமுக ஆட்சியை பிடிக்க உதவும்.

அப்போது அதிமுக ஆட்சிதான் அமையும். எனவே நிர்வாகிகள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை விரைந்து முடித்து, தேர்தலுக்கு தயாராக வேண்டும். கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தால், என்னிடம் தெரிவியுங்கள். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் அவர் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இக்கூட்டத்தில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணைப் பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் மத்திய அமைச்சர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், செம்மலை, பா.வளர்மதி, வைகைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT