தமிழகம்

அமைச்சர் துரைமுருகன், மனைவியை விடுவித்த உத்தரவு ரத்து - சொத்து குவிப்பு வழக்கின் பின்னணி

செய்திப்பிரிவு

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக பதியப்பட்ட மற்றொரு வழக்கிலும், அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்து வேலூர் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த 2006 - 2011 திமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பதவி வகித்த அமைச்சர் துரைமுருகன், 2007 - 2009 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.40 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரியை விடுவித்து, வேலூர் முதன்மை அமர்வு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக நடந்தது.

அப்போது அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரி தரப்பில், ‘‘வாங்கப்பட்ட அனைத்து சொத்துகளும் வருமான வரி கணக்கில் காட்டப்பட்டுள்ளன. அந்த சொத்துகள் வழக்கு பதியப்பட்ட காலகட்டத்துக்கு முன்பாக வாங்கப்பட்டவை. துரைமுருகனின் மனைவிக்கு தனிப்பட்ட வருவாய் ஆதாரங்கள் உள்ளன. இருப்பினும் அவரை இல்லத்தரசி எனக்கூறி இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆவண. ஆதாரங்களை எல்லாம் சரிபார்த்த பிறகே அவர்கள் இருவரையும் வேலூர் சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது’’ என வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி பி.வேல்முருகன், இந்த சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரியை விடுவித்து வேலூர் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், இவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து தினமும் விசாரணை நடத்தி வழக்கை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டுமெனவும் வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கெனவே கடந்த 1996-2001 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.92 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் சகோதரர் உள்ளிட்ட குடும்பத்தினர் மீது பதியப்பட்ட வேறொரு வழக்கில் இருந்து அவர்களை விடுவித்து வேலூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2007-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை, நீதிபதி பி.வேல்முருகன் நேற்றுமுன்தினம் ரத்து செய்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT