அமைச்சர் பொன்முடி | கோப்புப்படம் 
தமிழகம்

அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சைவம் மற்றும் வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திராவிடர் கழகம் சார்பில் கடந்த 8-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி, சைவம் மற்றும் வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கட்சி பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் தாக்கல் செய்துள்ள மனுவில், “மக்கள் பிரதிநிதி என்ற முறையில், அமைச்சர்பொன்முடியின் பேச்சு, அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

பொன்முடியின் பேச்சு, கருத்து சுதந்திரத்தின் கீழ் வராது. குறிப்பிட்ட மதத்தை பற்றி அவதூறாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல. மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் அனைத்து மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு பொன்முடிக்கு உள்ளது. அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்கள் அளித்தும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பதவி பிரமாணத்தை மீறி செயல்பட்ட அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்,” என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், “இந்த வழக்கு தொடர்பாக மனுதாரர் தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவில், வழக்குக்கு தொடர்பில்லாத முதல்வர் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ளார். எனவே, அவற்றை நீக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

அரசு தலைமை வழக்கறிஞர் சுட்டிக்காட்டிய பகுதிகளை நீக்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழக அரசு ஜூன் 5-ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 19-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

SCROLL FOR NEXT