மதுரை: குடும்ப பிரச்சினையில் ஜமாத் பிறப்பித்த உத்தரவை மீறி நீதிமன்றம் சென்ற வழக்கறிஞர் குடும்பத்துடன் ஊரை விட்டு விலக்கி வைக்கப்பட்டது குறித்து வட்டாச்சியர் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சோழந்தூரை சேர்ந்த முகமது அப்துல்லா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நான் ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறேன். எனது ஊரைச் சேர்ந்த பெண்ணுக்கு எனக்கும் கடந்த 2017ல் முஸ்லிம் ஜமாத்தில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.
எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், எனக்கும் என் மனைவிக்கும் ஏற்பட்ட சிறு பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து விட்டோம். இந்நிலையில் என் மனைவி என்னோடு வாழ விரும்பவில்லை என இஸ்லாமிய முறைப்படி பள்ளிவாசலில் வைத்து என்னிடமிருந்து விவகாரத்து பெற்றார். ஜமாத் முன்னிலையில் எனது குழந்தைகளை வாரத்தில் ஒரு நாள் சந்திக்க அனுமதியும் அவர்களுக்கு பராமரிப்பு செலவுக்கு பணம் கொடுக்கவும் முடிவெடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் மாதம் பராமரிப்பு செலவு தொகை கொடுத்து வருகிறேன். ஆனால் எனது குழந்தைகளை பார்க்க எனது மனைவி குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை, இதை எதிர்த்து நான் ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தேன்.
என் குடும்ப பிரச்சினைக்கு சட்டரீதியாக நீதிமன்றத்தை அணுகியதை தவறு என்றும் பேச்சை மீறி நீதிமன்றம் சென்றதால் என்னையும் எனது குடும்பத்தினரையும் ஊர் நீக்கம் செய்தும் எங்கள் வீட்டில் நிகழும் மரணம் மற்றும் திருமண நிகழ்வில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது ஜமாத் வரி வசூல் செய்யக்கூடாது, இறந்தவர்களுக்கு அடக்கஸ்தலம் வழங்கப்படாது என்றும் ஜமாத்தில் தீர்மானம் போட்டுள்ளனர்.
ஜனநாயக நாட்டில் சட்டவிரோதமாக எங்களை ஊர் நீக்கம் செய்த ஜமாத் நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, எங்களை ஊர் நீக்கம் செய்த ஜமாத் தலைவர்,செயலர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி தனபால் முன் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “காவல்துறை விசாரணையில் மனுதாரர் ஊர் நீக்கம் செய்யவில்லை எனத் தெரிவிக்கப்படுள்ளது. இருப்பினும் மனுதாரர் தன்னிடம் ஜமாத் நிர்வாகம் வரி வசூல் செய்யவில்லை எனக் கூறுகிறார். எனவே மனுதாரர் உரிய ஆவணங்களுடன் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் தாலுகா வட்டாட்சியரிடம் மனு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் வட்டாட்சியர் ஊர் நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்தும் வரி வசூல் செய்யாதது குறித்தும் வட்டாட்சியர் ஒரு மாதத்திற்குள் விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.