அமைச்சர் துரைமுருகன் | கோப்புப்படம் 
தமிழகம்

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகன், அவரது குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக மூன்று கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1996 முதல் 2001 வரையிலான காலக்கட்டத்தில் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்த துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக 3 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் 2002-ல் வழக்கு தொடரப்பட்டது.

அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் சகோதரர் மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து அவர்களை விடுவித்து வேலூர் நீதிமன்றம் 2007-ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து 2013-ல் அதிமுக ஆட்சியில் மறு ஆய்வு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி வேல்முருகன் விசாரித்தார்.

லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகைகளை விளக்கி வாதிட்டார்.

துரைமுருகன் சார்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ராவும், அவரது குடும்பத்தினர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன் வைத்தனர். அவர்கள் தங்கள் வாதத்தில், “வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களின் தனிப்பட்ட தொழில், குடும்ப வருமானத்தை அமைச்சர் துரைமுருகன் வருமானமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்டியுள்ளனர்.

வழக்கு சம்பந்தப்பட்ட காலத்துக்கு முன் வாங்கப்பட்ட சொத்துக்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட அமைச்சரின் குடும்பத்தினரை, அமைச்சரின் பினாமி என குறிப்பிட எந்த ஆதாரங்களும் இல்லை. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தனித்தனியாக, முறையாக வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர். அவற்றை லஞ்ச ஒழிப்புத் துறையும் ஏற்றுக் கொண்டுள்ளது. காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்து அதிகாரி விசாரிக்க வேண்டிய வழக்கை, அதிகார வரம்பு இல்லாத ஆய்வாளர் இந்த வழக்கை புலன் விசாரணை செய்துள்ளார்.

வழக்கு தொடர்வதற்கு, சட்டப்படி அனுமதி பெறப்படவில்லை. இதை எல்லாம் கருத்தில் கொண்டு விசாரணை நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்தது. அந்த உத்தரவை எதிர்த்து மறு ஆய்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், இந்த மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறையின் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், லஞ்ச ஒழிப்புத் துறை மறு ஆய்வு மனுவை ஏற்று, அமைச்சர் துரைமுருகன் மற்றும் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், வழக்கில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்து, சாட்சி விசாரணையை துவங்க, வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, 1996-2001 காலத்தில் சொத்து சேர்த்த வழக்கு என்பதால், இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கும்படி, சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT