கூட்டணி உறுதி செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக, சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியுடன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
தமிழக சட்டப்பேரவையில் எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகள் மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி சட்டப்பேரவைக்கு உறுப்பினர்கள் வருகை தந்த நிலையில், பேரவை நிகழ்வுகளுக்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான பழனிசாமியை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அறைக்கு சென்று சந்தித்து 20 நிமிடங்களுக்கு மேலாக பேசினார்.
அதிமுக - பாஜக கூட்டணி உறுதிசெய்யப்பட்ட பின்னரும், நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகும் முதல்முறையாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாக மாறியது. இந்த சந்திப்பின்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, தாளவாய் சுந்தரம், பாஜக எம்எல்ஏ காந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பு அதிமுக - பாஜக கூட்டணியின் இணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், கூட்டணியின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கான அடித்தளமாகவும் அமைந்திருப்பதாக கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறுகையில், சட்டப்பேரவை வளாகத்தில் அனைத்து உறுப்பினர்களும்தான் என்னை வந்து சந்திக்கின்றனர். பாமக எம்எல்ஏ கூட தினமும் என்னை சந்தித்துதான் செல்கிறார். ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் என்கிற முறையில் நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். வேறொன்றும் இல்லை” என்று தெரிவித்தார்.