பல்லாவரம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டப் பிறகும், அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் பேசிய கருத்துகள் சர்ச்சையானது. அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு அதிமுக, பாஜக உள்பட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தன. இதனிடையே திமுகவின் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். பின்னர் தன்னுடைய கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டார். செனனை உயர் நீதிமன்றமும் அமைச்சர் பொன்முடி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
பெண்களை தொடர்ந்து இழிவுப்படுத்தும் வகையில் கீழ்த்தரமான முறையில் ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்தும் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரியும் பல்லாவரத்தில் அதிமுக சார்பில் இன்று ( ஏப். 22) கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசியதாவது: “தமிழகத்தில் மிகப்பெரிய புரட்சி வெடித்துக் கொண்டிருக்கிறது. அமைச்சராக உள்ள பொன்முடியின் பேச்சு எவ்வளவு பெரிய அவமானம் அசிங்கம்.
இந்த போராட்டம் வெடித்து 2026-ல் புரட்சி ஏற்பட்டு பழனிசாமி முதல்வராக பதவியேற்பார். சகோதரி கூறியவுடனே அமைச்சர் பொன்முடியை, கட்சி பதவியில் இருந்து நீக்கிவிட்டீர்கள். தமிழகத்தில் உள்ள பெண்கள் குரல் கொடுக்கிறார்கள் அமைச்சர் பதவியில் இருந்து ஏன் நீக்கவில்லை? முதல்வரும், துணை முதல்வரும் இதைப்பற்றி பேசாமல் இருப்பது ஏன்? பேசாமல் இருக்க இருக்க புரட்சி வெடிக்கும். நீதிமன்றம் கூறியும் பொன்முடி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யாதது ஏன்?
பொன்முடி பேசியதை முதல்வர் ஸ்டாலின் ரசிக்கிறாரா? ஏற்றுக்கொள்கிறாரா? ஒத்துக்கொள்கிறாரா? பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவரை கைது செய்ய வேண்டும். அதிமுக -பாஜக கூட்டணி வெற்றிக் கூட்டணி, என்று அவர் பேசினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், பல்லாவரம் முன்னாள் எம்எல்ஏ தன்சிங் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் அமைச்சர் சின்னையா உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.