கோப்புப்படம் 
தமிழகம்

ரேஷன் கடைகள் முன்பு மரங்கள் நட நடவடிக்கை: அமைச்சர் சக்கரபாணி உறுதி

ச.கார்த்திகேயன்

சென்னை: “தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகள் முன்பும் மரங்கள் நடவும், மேற்கூரை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய, தருமபுரி தொகுதி எம்.எல்.ஏ. வெங்கடேஷ்வரன், “ரேஷன் கடைகளில் பெண்கள் தான் அதிக எண்ணிக்கையில் வெயிலில் நின்று பொருட்கள் வாங்குகின்றனர். எனவே ரேஷன் கடைகள் முன்பு மரம் நட வேண்டும். இல்லாவிட்டால் நிரந்தரமாக மேற்கூரை அமைக்க வேண்டும்” என்றார்.

இதற்கு உணவுத்துறை சக்கரபாணி பதில் அளித்து பேசியதாவது: “தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் மரம் நடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ரேஷன் கடைகளுக்கு முன்பாக நல்ல நிலையில் எப்போதும் நிரந்தரமாக இருக்கும் வரையில் மேற்கூரை அமைக்கவும், ரேஷன் கடைகளுக்கு முன்பாக மரங்கள் நடவும், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து, எம்.எல்.ஏ. வெங்கடேஷ்வரன் பேசும்போது, “தமிழகத்தில் அதிக அளவில் தருமபுரியில் தான் நெல் அரவை ஆலைகள் உள்ளன. அதனால் அவற்றுக்கு போதிய நெல் வழங்க அரசு முன்வருமா? கேழ்வரகு கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா?” என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் சக்கரபாணி, “கடந்த ஆண்டு 24 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 32 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தருமபுரியில் உள்ள அரவை ஆலைகளுக்கு அதிக நெல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வரை விவசாயிகளிடம் இருந்து 4311 டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டு, ரூ17.20 கோடி, விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT