தமிழகம்

பட்டாசு தொழிலாளர் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் ஆலை மூடலை கைவிடுக: முத்தரசன்

தமிழினி

சென்னை: பட்டாசு ஆலைகளில் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால் அதை சரி செய்ய கால அவகாசம் கொடுக்க வேண்டும். மேலும் விதி மீறலுக்கு தண்டனைத்தொகையும் விதிக்கலாம். மாறாக உடனடியாக நூறுக்கு மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்படுவது தொழிலையும், தொழிலாளர் வாழ்வையும் பாதிக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், சிவகாசி, மற்றும் அதன் சுற்று வட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. பட்டாசு தொழிலை நம்பி நேரிடையாகவும், மறைமுகமாகவும் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த தொழிலில் பணியாற்றும் தொழிலாளர்கள் உயிருக்கும், சுற்றுச் சூழலுக்கும் பாதுகாப்பு கொடுக்கின்ற முறையில் விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

பட்டாசு தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கும் போதே, விதிமுறைகள் செயலாக்கப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்ட பின்பு தான் அனுமதி வழங்கப்படுகிறது. பட்டாசு தொழிற்சாலைகள் தொடங்கி நடைபெறும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. விபத்தை தடுக்கவும், மனித உயிர்கள் பாதுகாக்கப்படவும், அதிகாரிகளால் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

அப்போது விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக தொழிற்சாலை மூடி சீல்வைக்கப்படுகிறது. இப்படி மூடப்பட்ட தொழிற்சாலைகள் தற்போது 100-க்கும் மேல் உள்ளன. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளார்கள். அவர்களுக்கு வேறு வாழ்வாதாரம் ஏதுமில்லை.

பட்டாசு ஆலைகளில் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால் அதை சரி செய்ய கால அவகாசம் கொடுக்க வேண்டும். மேலும் விதி மீறலுக்கு தண்டனைத்தொகையும் விதிக்கலாம். மாறாக உடனடியாக நூறுக்கு மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்படுவது தொழிலையும், தொழிலாளர் வாழ்வையும் பாதிக்கும். எனவே தொழிலாளர்கள், சிறு வியாபாரிகளின் நலன்களுக்காக, விதிமீறல்கள் சரிசெய்யப்பட்டதை உறுதி செய்து மூடப்பட்ட பட்டாசு தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT