சென்னை: சென்னையில் மின்சாரம் தாக்கிய மாணவனை காப்பாற்றிய இளைஞருக்கு தங்க மோதிரம் அணிவித்து, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பாராட்டு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை அரும்பாக்கம் பகுதியில் கடந்த ஏப்.16-ம் தேதி தேங்கி நின்ற மழை நீரில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த ரேகன் (வயது 8) என்ற 3-ம் வகுப்பு மாணவன், தண்ணீரில் காலை வைத்தவுடன் மின்சாரம் தாக்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் துடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த, தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தஞ்சாவூர் ஒரத்தநாட்டைச் சேர்ந்த தா.கண்ணன் என்ற இளைஞர் உடனடியாக அச்சிறுவனை காப்பாற்றினார்.
தன் உயிரை துச்சமென மதித்து அச்சிறுவனை காப்பாற்றிய இளைஞரின் துணிவைப் பாராட்டி அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தா.கண்ணனை தனது இல்லத்துக்கு நேரில் வரவழைத்து, அவரது துணிவை பாராட்டி, அவருக்கு தங்க மோதிரம் பரிசளித்து வாழ்த்தினார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.