தமிழகம்

குடியரசு துணைத் தலைவர் ஏப்.25-ல் கோவை வருகை: ஊட்டியில் நடக்கும் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்

செய்திப்பிரிவு

கோவை: குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், வரும் 25-ம் தேதி மதியம் 2.30 மணிக்கு புதுடெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கோவைக்கு வருகிறார். கோவை பீளமேடு சர்வதேச விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு உயரதிகாரிகள் வரவேற்கின்றனர். தொடர்ந்து அவர், விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தீட்டுக்கல் பகுதிக்குச் சென்று தரையிறங்குகிறார். அன்றைய தினம்

ஊட்டியில் நடைபெறும் துணை வேந்தர்கள் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் கலந்து கொண்டு பேசுகிறார். இரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் அவர், மறுநாள் 26-ம் தேதி ஊட்டி தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா காட்சி முனை சிகரம் ஆகிய இடங்களைப் பார்வையிடுகிறார். 27-ம் தேதி ஊட்டியில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலமாக கோவை பீளமேட்டில் உள்ள விமான நிலையத்தை வந்தடைகிறார்.

அதன் பின்னர், 27-ம் தேதி காலை கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் தில் நடைபெறும் மாணவ, மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக வேளாண் பல்கலைக் கழகத்துக்கு வரும் குடியரசு துணைத் தலைவர், நிகழ்ச்சி முடிந்ததும், மதியம் கார் மூலமாக வேளாண் பல்கலைக்கழகத்தில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு வந்து, தனி விமானம் மூலம் புதுடெல்லி திரும்புகிறார்.

SCROLL FOR NEXT