சென்னை: ‘தகவல் தொழில்நுட்ப துறைக்கு நிதி குறைவாக ஒதுக்கப்படுகிறது. எனவே, டைடல் பார்க் அமைப்பது குறித்து நிதி, திறன், அதிகாரம் உள்ளவர்களிடம் கேளுங்கள்’ என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். அதற்கு, பேரவைத் தலைவர் பாசிட்டிவ்வாக பேசுமாறு அறிவுறுத்தினார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள்விக்கு தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்தார். அதன் விவரம்:
உதகமண்டலம் எம்எல்ஏ கணேஷ் (காங்கிரஸ்): உதகையில் டைடல் பார்க் அமைக்கப்படுமா?
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: உதகையில் இருந்து 87 கி.மீ. தூரத்தில் கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியில் 61 ஏக்கரில் ரூ.217 கோடியில் கடந்த 2008-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) பூங்கா அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் விப்ரோ, ஹெச்.சி.எல் உள்ளிட்ட ஐ.டி. நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. 26,500 பேர் பணிபுரிகின்றனர்.
கூடுதலாக 2.60 லட்சம் சதுரஅடியில் ரூ.116 கோடியில் புதிய தகவல் தொழில்நுட்ப கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு திறந்துவைத்தார். மேலும் 36 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் கோவையில் புதிதாக ஐ.டி. பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இத்திட்டத்தை நிறைவேற்றிய பிறகுதான், அடுத்த திட்டம் குறித்து பரிசீலிக்க முடியும்.
கூடலூர் எம்எல்ஏ பொன்.ஜெயசீலன் (அதிமுக): கூடலூர் தொகுதியில் சிறு தகவல் தொழில்நுட்ப பூங்கா (நியோ டைடல் பார்க்) அமைக்கப்படுமா?
பழனிவேல் தியாகராஜன்: துறையில் உள்ள சிக்கல்கள் குறித்து இந்த கூட்டத் தொடரிலேயே எனது உரையில் கூறியுள்ளேன். துறைக்கு நிதியும் குறைவாக ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்கள்போல, எல்லா ஐ.டி. பூங்காக்களும் எங்கள் துறையின்கீழ் செயல்படுவது இல்லை.
டைடல் பூங்கா, நியோ டைடல் பூங்கா ஆகியவை தொழில் துறையின்கீழ் செயல்படுகின்றன. அசாதாரண சூழ்நிலையாக இருந்தாலும், அதுதான் 20 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. யாரிடம் நிதியும், திறனும், அதிகாரமும் இருக்கிறதோ, அவரிடம் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் செய்து கொடுப்பார்கள்.
பேரவை தலைவர் அப்பாவு: அமைச்சர் இதையெல்லாம் முதல்வருடன் உள்ளுக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். பாசிட்டிவாக பதில் சொன்னால் உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். இவ்வாறு வாதம் நடந்தது.