ராமேசுவரம்: மீன்பிடி தடைகாலத்தைப் பயன்படுத்தி தமிழக கடலோரப் பகுதியில் விசைப் படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளான வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடற்பகுதிகளில் ஏப்ரல், மே மற்றும் ஜுன் மாதங்களை மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரிகளின் இனப்பெருக்க காலமாக, மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. மீன் வளத்தை பெருக்கும் நோக்கத்தில், இந்த கால கட்டத்தில் ஆண்டுதோறும் 61 நாட்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் 14 அன்று இரவு தொடங்கியது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரத்திலிருந்து எஸ்.பி பட்டிணம் வரையிலும் பாக் ஜலசந்தி கடலிலும், தனுஷ்கோடியிலிருந்து கன்னிராஜபுரம் வரையிலும் மன்னார் வளைகுடா கடலிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் விசைப் படகுகளில் மீன் பிடிக்க தடை செய்யப்பட்டு, படகுகள் கடற்கரை பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள விசைப் படகுகளில் இன்ஜின் பழுது நீக்குதல், தச்சுப் பணிகள், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பல்வேறு சீரமைப்பு பணிகளை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
மீனவர்கள் தங்களின் விசைப்படகுகளை மராமத்து செய்ய மீனவர்கள் கரைக்கு ஏற்றுவது வழக்கம். இதற்கு மீனவர்கள் முன்பு கட்டைகளை பயன்படுத்தி வந்தனர். ராமேசுவரத்தில் விசைப்படகுகளை கரையில் ஏற்ற பலூன்களை பயன்படுத்தி படகை கரைக்கு கொண்டு வருகின்றனர். பலூன்கள் மூலம் மீன்பிடி விசைப் படகை கடலில் இருந்து கரையில் ஏற்ற கரைக்கு அருகே படகு கொண்டுவரப்பட்டு அதன் கீழ் பலூன்களை வைத்து காற்று நிரப்பி படகு கரையேற்றப்படுகிறது.