தமிழகம்

சூரியசக்தி மின் உற்பத்தியில் தமிழகம் 4-வது இடம்

செய்திப்பிரிவு

கடந்த 2024-25ம் ஆண்டில் 10,153.48 மெகாவாட் சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து தமிழகம் அகில இந்திய அளவில் தொடர்ந்து 3-வது ஆண்டாக 4-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இதுகுறித்து, மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை வெளியிட்டுள்ள தகவல்: சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதில், அகில இந்திய அளவில் மாநிலங்களுக்கு இடையே போட்டி அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த 2024-25ம் ஆண்டில் 10,153.48 மெகாவாட் சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து தமிழகம் அகில இந்திய அளவில் தொடர்ந்து 3-வது ஆண்டாக 4-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இப்பட்டியலில்,28,286.47 மெகாவாட் சூரியசக்தி மின்னுற்பத்தி செய்து குஜராத் மாநிலம் முதலிடத்தையும், மகாராஷ்டிரா மாநிலம் 10,687.27 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து 2-வது இடத்தையும் பிடித்துள்ளது.

மத்திய அரசின் சூரியசக்தி மின்திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முனைப்புக் காட்டி வருகிறது.

பிரதம மந்திரி சூரியசக்தி மின்னுற்பத்தி திட்டத்தில், கடந்த ஓராண்டில் 23,500 நுகர்வோர் இணைந்துள்ளனர். இதன் மூலம், 125 மெகாவாட் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,‘வரும் 2028-ம் ஆண்டுக்குள் 3 லட்சம் நுகர்வோரை பிரதம மந்திரி சூரியசக்தி மின்னுற்பத்தி திட்டத்தில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது சோலார் பேனல் நிறுவுவதற்காக 850 விற்பனையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

SCROLL FOR NEXT