நாகப்பட்டினம்: ஈஸ்டர் பண்டிகையையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
புனித வெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து 3-ம் நாள் உயிர்தெழுந்த தினம் ஈஸ்டர் பண்டிகையாக, உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. அதன்படி, வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்தி பெற்ற புனித அன்னை ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை நேற்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நேற்று அதிகாலை சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.
முன்னதாக, பேராலயத்தின் கலையரங்கில் நேற்று முன்தினம் இரவு 11.45 மணி முதல் பாஸ்கா திருவிழிப்பு திருப்பலி நடைபெற்றது. மெழுகுவத்திகளை கையில் ஏந்தியபடி ஆயிரக்கணக்கானோர் பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து, நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இதில், இயேசு உயிர்தெழுந்த நிகழ்வுகள் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டன. இயேசு உயிர்த்தெழும் காட்சியின்போது வாணவேடிக்கை நடத்தப்பட்டு, பேராலயம் வண்ண விளக்குகளின் ஒளியில் மிளிர்ந்தது. தொடர்ந்து, திவ்ய நற்கருணை ஆராதனை நிறைவேற்றப்பட்டது.
ஈஸ்டர் பெருவிழாவின் சிறப்பு அம்சமாக புது நெருப்பு புனிதப்படுத்துதல், பாஸ்கா திரி பவனி மற்றும் பாஸ்கா புகழ் ஆகியவை இடம்பெற்றன. திருச்சடங்குகளை பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் பங்குத் தந்தைகள் நடத்தினர். தொடர்ந்து, திவ்ய நற்கருணை ஆசிர் வழங்கப்பட்டது.
மேலும், பேராலயத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழ், மலையாளம், கொங்கனி, தெலுங்கு, ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.