சென்னை: திமுகவை நம்பி விசிக கிடப்பது போன்ற தோற்றத்தை பாஜக உருவாக்குவதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் முகநூல் நேரலையில் பேசியதாவது: தேர்தல் களத்தில் பாஜகவை முறியடிக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதைவிட அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்பது பன்மடங்கு முக்கியம். அரசியல் விவாதங்களில் நாமும் பங்கேற்க வேண்டும், ஆனால் சிக்கிக் கொள்ளக் கூடாது.
தமிழகத்தில் பாஜக வலிமை பெறக் கூடாது. தமிழக அரசியலில் தேவையற்ற உரையாடல்களை பாஜகவினர் திட்டமிட்டு உருவாக்குகின்றனர். சாதிய, மதவாத சக்திகளை ஊக்கப்படுத்துகிறார்கள். திமுக கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் கருத்துகளை முன்வைப்பதால், விசிகவுக்கு எதிரான அவதூறுகளை பரப்புகின்றனர்.
திமுகவை மட்டுமே நம்பிக் கிடக்கிறோம் என்பதை போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர். தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் நம்மால் எடுக்க முடியும். எல்லா கதவுகளையும் திறந்து வைப்பது, ஒரே நேரத்தில் பலரோடு பேரம் பேசுவது, கூடுதலாக பேரம் படியும் இடத்தில் கூட்டணி அமைப்பது என்பதெல்லாம் ராஜதந்திரம் இல்லை. அது சுயநலம் சார்ந்த சந்தர்ப்பவாத அரசியல். நாம் அதில் ஈடுபாடு காட்டவில்லை.
நிபந்தனையில்லாமல் கூட்டணியில் தொடர துணிச்சல் வேண்டும். இதை புரிந்து கொள்ள முடியாதவர்கள் அவதூறு பரப்புகின்றனர். அரசியல் விவாதங்களில் தலைமை முடிவை அறிந்து மூத்த நிர்வாகிகள் எச்சரிக்கையுடன் கருத்துகளை பகிர வேண்டும். திமுக கூட்டணியை பலவீனப்படுத்துவதற்கான துருப்புச் சீட்டாக விசிகவை கருதுகின்றனர். ஆளுங்கட்சியோடு இருக்கும் முரணும், கூட்டணி தொடர்பான யுத்தியும் வெவ்வேறு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.