சென்னை: உலகளாவிய வர்த்தக மாற்றங்களுக்கு நடுவிலும், குறைந்த இழப்பை எதிர்கொண்டு முன்னேறும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளதாக துக்ளக் இதழ் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி கூறினார். சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் 19-வது வி.நாராயணன் நினைவுச் சொற்பொழிவு கருத்தரங்கம் சென்னை வடபழனியில் உள்ள அதன் வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பேசியதாவது: தற்போதைய சர்வதேச அரசியல் மாற்றங்களால் உலகமயமாதல் நடவடிக்கைகளுக்கான காலம் முடிவுக்கு வந்துவிட்டது. இந்தியா போன்ற பெரிய நாடுகளை பொருத்தவரை, பிற நாடுகளுடன் வலிமையான நல்லுறவை பேண முன்வர வேண்டும்.
எனினும், ஒரே விவகாரத்தில் பல்வேறு நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட முடியாது. உலகளாவிய வர்த்தக மாற்றங்களுக்கு நடுவிலும், குறைந்த இழப்பை எதிர்கொண்டு முன்னேறக்கூடிய ஆற்றல் இந்தியாவுக்கு உண்டு.
அதற்கு நம் நாட்டின் திடமான சமூக பொருளாதார அடித்தளமே காரணம். டிரம்ப் முதன்முறையாக அதிபராக இருந்தபோது அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்குமான உறவு, ஆக்கப்பூர்வமான வெளியுறவுடன் கூடிய முதிர்ந்த ஜனநாயகத்துடன் இருந்தது. தற்போது 2-வது முறையாக டிரம்ப் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள காலத்தை இந்தியாவின் இயல்பான கூட்டாளியாக உருவாக்குவதற்கான வாய்ப்பாகவே பார்க்க வேண்டும்.
பொருளாதார வீக்கம் மற்றும் சொத்து வளர்ச்சிகளால் எந்த காலத்திலும் பாதிக்கப்படாத இந்தியாவின் பண்பாட்டுக் கூறுகளை அமெரிக்கா உணர்வதற்கான முயற்சியாகவும் டிரம்ப்பின் ஆட்சியைக் கருதலாம். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் சாஸ்த்ரா பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.வைத்திய சுப்ரமணியம், சிட்டி யூனியன் வங்கி தலைவர் ஜி.மகாலிங்கம், தி இந்து பிசினஸ்லைன் ஆசிரியர் ரகுவீர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.