கோவை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கோவையில் நடைபெற உள்ள முதல் பூத் கமிட்டி மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள அவர் வரும் 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை மையப்படுத்தி பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் தவெக முதல் பூத் கமிட்டி மாநாடு ஏப்ரல் 26 அல்லது 27 தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.
இதுகுறித்து அக்கட்சி நிர்வாகிகள் கூறும்போது, “கோவையில் நடைபெற உள்ள முதல் பூத் கமிட்டி மாநாட்டில் தலைவர் விஜய் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. திங்கள்கிழமை அவரது வருகை குறித்து கட்சி தலைமை சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும். மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க வேண்டுமென ஏற்கெனவே அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அதற்கேற்ப பொது பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தல், ஆர்ப்பாட்டம் நடத்துதல் போன்ற நிகழ்வுகளை கட்சியினர் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகிறோம். தலைவர் வருகை கோவை மாவட்ட கட்சியினருக்கு உத்வேகத்தை ஏற்படுத்தும்.” என்றனர்.