எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம் 
தமிழகம்

மக்கள் குறைகளை தீர்க்காத ‘கோமா’ அரசு: திருச்சி சம்பவத்தில் திமுகவை சாடிய இபிஎஸ்

கரிசலான்

சென்னை: திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்து மூன்று பேர் உயிரிழந்தது தொடர்பாக, ‘மக்களின் குறைகளை கேட்காத, அவற்றை நிறைவேற்றாத திமுக அரசு, ஒரு கோமா அரசு’ என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

கடந்த 15 நாட்களாக குடிநீரில் பிரச்சினை இருப்பதாக மக்கள் மாநகராட்சிக்கு புகார் அளித்தும், இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே இந்த உயிரிழப்புகள் என மக்கள் கூறுகின்றனர்.

மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான குடிநீரைக் கூட சுகாதாரமாக அளிக்க முடியாத அரசு இருந்து என்ன பயன்? இந்த பொம்மை முதல்வரைப் பார்த்து நான் கேட்கிறேன், அவர் பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் அரசு என்ற ஒன்று செயல்படுகிறதா இல்லையா?

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மனுக்களை வாங்கி ஒரு பெட்டியில் போட்டார்; இதனை நான் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றவில்லை என்றால் கோட்டைக்குள் வந்து என் கதவைத் தட்டிக் கேள்வி கேளுங்கள் என்றார். அந்த மனுக்களையே அவர் இன்னும் நிறைவேற்றிய பாடில்லை!

இப்படிப்பட்ட முதல்வர் ஆளும் அரசும், அதே போன்று மக்களின் மனுக்களுக்கு கொஞ்சமும் மதிப்பளிக்காத அரசாகவே இருக்கிறது. மக்களின் குறைகளை கேளாத, நிறைவேற்றாத இந்த திமுக அரசு, ஒரு Coma அரசு.

உடனடியாக இந்த உயிரிழப்புகளுக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்; உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; தமிழகம் முழுக்க குடிநீரை சுகாதார முறையில் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT