தமிழகம்

தனியார் மருத்துவமனை 5-வது மாடியில் இருந்து குதிக்க முயன்ற பெண்ணை காப்பாற்றிய போலீஸார்

செய்திப்பிரிவு

ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையின் 5-வது மாடி பால்கனியில் இருந்து கீழே குதிக்க முயன்ற பெண்ணை போக்குவரத்து போலீஸார் காப்பாற்றினர்.

திருவொற்றியூரைச் சேர்ந்த 47 வயது பெண் ஒருவர், மன அழுத்தம் காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், நேற்று காலை மருத்துவமனையின் 5-வது மாடி அறையின் வெளியே வந்த அப்பெண், பால்கனியில் இருந்து கீழே குதிக்க முயற்சி செய்துள்ளார்.

இதை அப்பகுதியில் போக்குவரத்து காவல் பணியில் இருந்த போக்குவரத்து காவலர்கள் தேவராஜ் மற்றும் கார்த்திக் ஆகியோர் கண்டு, உடனடியாக 5-வது மாடிக்கு சென்றனர். அப்பெண்ணை உள்ளே வருமாறு அழைத்தனர். ஆனால், அந்த பெண், கீழே குதிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.

இதையடுத்து, போலீஸார் துரிதமாக பால்கனியில் இறங்கி, அப்பெண்ணை மீட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து செயல்பட்டு அப்பெண்ணை காப்பாற்றிய போக்கு வரத்து போலீஸாரை பொதுமக்களும், காவல் உயரதிகாரிகளும் வெகுவாகப் பாராட்டினர்.

SCROLL FOR NEXT