தமிழகம்

ஒழுக்கம், கண்ணியத்துடன் செயல்படுங்கள்: தவெக ஐடி பிரிவுக்கு விஜய் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

தவெக ஐடி பிரிவு என்றால் ஒழுக்கமானது, கண்ணியமானது என்று அனைவரும் சொல்லும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தினார். ‘நீங்கள் தவெகவின் வர்ச்சுவல் வாரியர்ஸ்’ என்றும் பாராட்டினார்.

தவெக தகவல் தொழில்நுட்ப (ஐடி) பிரிவு ஆலோசனை கூட்டம் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு துணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஜெயபிரகாஷ், சமூக ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளர் குருமூர்த்தி, இணை ஒருங்கிணைப்பாளர் ப்ளோரியா இமாகுலேட் மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த 500-க்கும் மேற்பட்ட ஐடி பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சமூக ஊடகங்களை எவ்வாறு கையாள்வது, கட்சியின் செயல்பாடுகளை சமூக ஊடகங்கள் வாயிலாக எவ்வாறு மக்களிடம் கொண்டு செல்வது, 2026 தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் சமூக ஊடகங்களில் எதுபோன்ற கருத்துகளை பதிவிடுவது என்பது தொடர்பாக ஐடி பிரிவு நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளும், பயிற்சியும் வழங்கப்பட்டது.

கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, கட்சித் தலைவர் விஜய், காணொலி வாயிலாக அங்குள்ள திரையில் தோன்றினார். இதை பார்த்ததும் நிர்வாகிகள் உற்சாகம் அடைந்தனர். அவர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி விஜய் பேசியதாவது:

காணொலி வாயிலாக உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நமது இந்த சமூக ஊடக பிரிவு படை, நாட்டிலேயே மிகப்பெரிய படை என்கின்றனர். இதை நாம் சொல்வதைவிட, மற்றவர்களே பார்த்து தெரிந்து கொள்கின்றனர்.

இனி நீங்கள் ரசிகர்கள் மட்டுமல்ல, தவெகவின் ‘வர்ச்சுவல் வாரியர்ஸ்’ (இணையவழி போர் வீரர்கள்). இப்படித்தான் உங்களை அழைக்கப் போகிறேன். தவெக ஐடி பிரிவு என்றால், ஒழுக்கமானது, கண்ணியமானது என்று அனைவரும் சொல்லும் வகையில் நீங்கள் நடந்துகொள்ள வேண்டும். அதை மனதில் வைத்து வேலை செய்யுங்கள். விரைவில் உங்களை சந்திக்கிறேன். வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT