திருமாவளவன் | கோப்புப்படம் 
தமிழகம்

“பாஜகவுடன் கூட்டணி வைத்து அதிமுக செய்தது வரலாற்றுப் பிழை!” - திருமாவளவன்

செய்திப்பிரிவு

சென்னை: “அதிமுக வரலாற்றுப் பிழையை செய்துவிட்டது. பாஜகவுடனான கூட்டணியை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியது: “பாஜக , ஆர்எஸ்எஸ் அமைப்புகள் ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் சக்தியாக உருவெடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் நிலை கொண்டிருக்கும் பெரியார், சமூக நீதி அரசியலை நீர்த்து போகச் செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள்.

திராவிட கட்சிகளில் ஏதேனும் ஒன்றை பலவீனப்படுத்தி, பாஜக கால் ஊன்ற நினைக்கிறது. பின்னர் மற்றொரு திராவிட கட்சியையும் அழிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். திமுக, அதிமுகவை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்பதை தாண்டி, சமூக நீதி அரசியலை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்பதே பாஜகவின் உள்நோக்கம்.

இதையெல்லாம் அறிந்தும்கூட அதிமுக வரலாற்றுப் பிழையை செய்துவிட்டது. 2021 சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வியை சந்தித்தபோதும், மீண்டும் பாஜகவோடு கூட்டணி வைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அதிமுகவுக்கு ஏற்படும் பின்னடைவு என்பதை தாண்டி, பாஜகவை வாக்கு வங்கி ரீதியாக வலிமைப்படுத்துவதற்கு துணை போவது என்பது ஒரு வரலாற்றுப் பிழை. தமிழர், சமூக நீதி நலன்கள் கருதி, கூட்டணி குறித்து அதிமுக மீண்டும் சிந்தித்து மறுபரிசீலனை செய்வது வரலாற்று தேவையாக இருக்கிறது” என்றார்.

SCROLL FOR NEXT