சென்னை: சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அரசு மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுவின் தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: கரோனா தொற்றுக்கு பிறகு பொது சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த அரசு போதிய அக்கறை காட்டவில்லை என்பது வருத்தமான உண்மை. மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விட ரூ.40 ஆயிரம் குறைவாக, இங்குள்ள எம்பிபிஎஸ், சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு தரப்படுகிறது.
இதிலிருந்து நம் அரசு மருத்துவர்களுக்கு தமிழகத்தில் எந்த அளவுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்பது தெரியும். எனவே, தமிழக சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் வரும் ஏப்.22-ம் தேதி எடுத்துக்கொள்ளப்படும் நிலையில், அதில் அரசு மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர் முன்வர வேண்டும்.
அதன்படி மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்களை இரு மடங்காக அதிகரிக்க வேண்டும். நீண்டகாலமாக அரசு மருத்துவர்கள் எதற்காக போராடி வருகிறார்களோ, அந்த அரசாணை 354-ஐ அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோரிக்கைகளை வலியுறுத்தி மேட்டூரிலிருந்து சென்னை நோக்கி அரசு மருத்துவர்கள் வரும் ஜூன் 11-ம் தேதி பாதயாத்திரை தொடங்கும் நிலையில், மருத்துவர்களின் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதல்வர் சட்டப்பேரவையில் அறிவிப்பை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.