சென்னை: சென்னை திருவொற்றியூர் பகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகளை ஒப்படைக்க வலியுறுத்தி மீனவ பயனாளிகள் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் திட்டப் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டு, கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். குடியிருப்புகள் தயார் நிலையில் உள்ள நிலையில், பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய வாரியம் சார்பில் அழைத்து, பயனாளி பங்கீட்டு தொகையாக ரூ.2 லட்சத்துக்கு மேல் செலுத்துமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே முன்பணமாக ரூ.50 ஆயிரம் கட்டியிருப்பதால், மேற்கொண்டு செலுத்த தங்களிடம் பணம் இல்லை என பயனாளிகள் கூறி வந்தனர். இந்த பயனாளிகளில் பெரும்பாலானோர் மீனவர்கள்.
இந்நிலையில் பல ஆண்டுகளாக தற்காலிக குடியிருப்புகளில் வசிக்கும் பயனாளிகள் குடியிருப்புகளை விரைந்து வழங்குமாறு வாரிய அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்தனர். இதுவரை வீடுகளை ஒப்படைக்காததைக் கண்டித்து பயனாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் எண்ணூர் விரைவு சாலையில் நேற்று மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அச்சாலையில் இருபுறங்களிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் நேரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், அவர்களை சமாதானப்படுத்தி, வாரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்தனர். அதன்பேரில் பயனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.