தமிழகம்

இஸ்லாமியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரே இயக்கம் அதிமுக: தம்பிதுரை

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் வரும் 2026-ல் கூட்டணி ஆட்சி என்பதற்கு இடமே கிடையாது என அதிமுக எம்.பி. தம்பிதுரை தெரிவித்தார். விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாளையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் எம்.பி தம்பிதுரை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

சரியான கூட்டணி: தேர்தலில் எப்போதும் சந்தர்ப்பவாத கூட்டணியை அமைப்பது திமுக தான். ஆனால், கொள்கைக்காகவும், தமிழகத்தின் நலனுக்காகவும் அதிமுக அனைத்து தேர்தல்களில் கூட்டணி அமைத்து வருகிறது. அந்த வகையில், தற்போது அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நல்ல முடிவை எடுத்திருக்கிறார்.

சரியான கூட்டணியை அமைத்திருக்கிறார். சுதந்திரத்துக்குப் பிறகு இத்தனை ஆண்டுகளில் தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி அமைந்திருக்கிறதா? திராவிடக் கட்சிகள் இதுவரை கூட்டணி ஆட்சியை அமைத்தது இல்லை.

எனவே, 2026-ல் பழனிசாமி தமிழகத்தில் தனியாகத்தான் ஆட்சி அமைப்பார். கூட்டணி ஆட்சி என்பதற்கு இடமே கிடையாது. தமிழகத்தில் இனிமேல் கூட்டணி ஆட்சி வரப்போவதும் கிடையாது. டாஸ்மாக் ஊழலைப் பற்றி அமித் ஷா பேசியும், திமுக இதுவரை ஏன் வாய் திறக்கவில்லை? டாஸ்மாக்கில் ரூ.39,000 கோடி ஊழல் நடந்திருப்பதாகக் கூறிய அமித் ஷா மீது, முதல்வர் ஸ்டாலின் தைரியம் இருந்தால் வழக்கு தொடரட்டும்.

வாக்கு வங்கி குறையாது: இஸ்லாமியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரே இயக்கம் அதிமுகதான். எனவே, பாஜகவுடன் கூட்டணி அமைப்பதால், அதிமுகவில் இஸ்லாமியர்களின் வாக்கு வங்கி குறைந்துவிடும் என்று கூறுவது விவாதத்துக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும். ஆனால், இஸ்லாமிய மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்.

இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால், எந்த கூட்டணியில் இருந்தாலும் அவர்களுக்காக குரல் கொடுப்போம். எனவே, இஸ்லாமியர்களின் வாக்கு அதிமுகவுக்கு அதிகரிக்குமே தவிர குறையாது. இவ்வாறு அவர் கூறினார்.

கட்சி தலைமை அறிவுறுத்தல்: இதற்கிடையே கட்சி நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில், “அதிமுகவின் முக்கிய முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்தான தகவல்களை, கட்சியின் தலைமை உரிய நேரத்தில், உரிய முறையில் அவ்வப்போது தெரிவிக்கும்.

எனவே அதிமுக நிர்வாகிகள் கட்சியின் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த எவ்வித கருத்துகளையும், கட்சி தலைமையின் அனுமதி பெறாமல், சமூக ஊடகங்கள், பத்திரிக்கைகள், தகவல் தொடர்பு ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்” என அறிவுறுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT