கடலூர்: பாரம்பரிய சின்னங்களை காக்கும் விதமாக கடலூர் கோட்டை அஞ்சல் துறை ஊழியர்கள் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வீராணம் ஏரிக்கரையில் மரபு நடைபயணம் மேற்கொண்டனர்.
ஆண்டுதோறும் ஏப்ரல் 18ம் தேதி பாரம்பரிய சின்னங்கள், களங்களை பாதுகாக்கும் விதமாக உலக பாரம்பரிய நாள் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று (ஏப். 17) காலை கடலூர் அஞ்சல் கோட்டத்தின் சார்பாக பிற்காலச் சோழ இளவரசரான இராஜாதித்த சோழனால் கி.பி.10 ம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வீராணம் ஏரியினை பாதுகாக்கும் விதமாகவும் அதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் விதமாகவும், கடலூர் அஞ்சல் கோட்டத்தைச் சார்ந்த சுமார் 100 அஞ்சல் ஊழியர்கள் கடலூர் கோட்ட கண்காணிப்பாளர் எம்.கணேஷ் தலைமையில் மரபு நடை மேற்கொண்டனர்.
இந்த மரபு நடைபயணம் லால்பேட்டை துணை அஞ்சல் நிலையத்தில் துவங்கி வீராணம் ஏரிக்கரை ஓரம் திருச்சின்னபுரம் வழியாக நத்தமலையில் முடிவுபெற்றது. முன்னதாக திருச்சின்னபுரம் அனந்தீஸ்வரர் கோயிலில் உள்ள கல்வெட்டில் உள்ள குறிப்புகளை சோழமண்டல வரலாற்று தேடல் குழுவினைச் சார்ந்த விக்ரமன் மற்றும் பூங்குழலி ஆகியோர் அஞ்சல் துறை மரபு நடை பயணக் குழுவினருக்கு எடுத்துரைத்தனர்.
மேலும் காவேரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன் கலந்துகொண்டு வீராணம் ஏரியின் நீர்ப்பாசன முக்கியத்துவத்தினை எடுத்துரைத்தார். சிதம்பரம் மேற்கு அஞ்சல் துறை உட்கோட்ட ஆய்வாளர் பாலமுரளி, லால்பேட்டை அஞ்சல் அதிகாரி காமராஜ் மற்றும் அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.