மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் சித்திரை முழு நிலவு பெருவிழா மாநாட்டுக்கான பந்தக்காலை பாமக தலைவர் அன்புமணி நேற்று நட்டார். உடன் அவரது மகள் சம்யுக்தா, பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி மற்றும் நிர்வாகிகள் ஏ.கே.மூர்த்தி, திருக்கச்சூர் ஆறுமுகம், சக்தி கமலாம்மாள் உள்ளிட்டோர். | படம்: எம்.முத்துகணேஷ் | 
தமிழகம்

சித்திரை முழு நிலவு மாநாடு பந்தக்கால் நடும் விழா: பாமக தலைவர் அன்புமணி பங்கேற்பு

செய்திப்பிரிவு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு வன்னியர் சங்க பெருவிழா மாநாட்டுக்கான பந்தக்காலை, திருமண வீடுகளில் நடப்பது போல நாதஸ்வரம், மேளதாலம் முழங்க ஆகம முறைப்படி நட்ட பாமக தலைவர் அன்புமணி, தமிழக வளர்ச்சிக்கான மாநாடாக அமையும் என தெரிவித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு, மாமல்லபுரத்தில் 1998-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. கடந்த 2013-ம் ஆண்டு மாமல்லபுரத்தில் கடைசியாக நடைபெற்ற சித்திரை பெருவிழாவையடுத்து அந்த விழா, தொல்லியல் துறை தடை உத்தரவால் கடந்த 12 ஆண்டுகளாக மாமல்லபுரத்தில் நடத்தப்படவில்லை.

இந்நிலையில், அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் மற்றும் தங்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் லட்சக்கணக்கில் பாமக மற்றும் வன்னிய சங்கத்தினர் கூடும் வகையில், மீண்டும் சித்திரை முழு நிலவு பெருவிழாவை நடத்த பாமக முடிவு செய்துள்ளது.

இதில், மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் உள்ள சித்திரை முழு நிலவு பெருவிழா மாநாடு நடத்துவதற்கு 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மேலும், அந்த இடத்தில் மாநாட்டுக்கான பிரம்மாண்ட மேடை அமைப்பதற்கான பந்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது. இதில், பாமக. தலைவர் அன்புமணி பங்கேற்று பந்தக்கால் நட்டார்.

முன்னதாக, திருமண வீடுகளில் நடப்பது போல, மேல்தாளம் முழங்க, பந்தக்காலுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து திருமண வீடுகளில் செய்யும் நடைமுறைகளை பின்பற்றி பந்தக்கால் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அன்புமணியின் மகள் சம்யுக்தா, பாமகவின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, முன்னாள் எம்எல்ஏக்கள் திருகச்சூர் ஆறுமுகம், சக்தி கமலாம்மாள் உட்பட பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர், பாமக தலைவர் அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மருத்துவர் ராமதாஸ் வழிகாட்டுதலில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. வன்னியர் சங்கம் நடத்தும் இந்த மாநாட்டில், தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பின் தங்கிய மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டின் மூலம் சமூக நீதியை வென்றெடுக்க லட்சக்கணக்கான மக்கள் கூட உள்ளனர்.

தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி, 69 சதவித இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும். மேலும், வன்னியர்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள பிற பின் தங்கிய சமுதாயங்கள் அனைவருக்கும், மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி அடிப்படையில் மாநாட்டை வெற்றிகரமாக நடத்த திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தை விட்டு மது மற்றும் போதை பொருட்களை ஒழிக்க வேண்டும் மற்றும் பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவைகளை வலியுறுத்த உள்ளோம்.

கடந்த 70 ஆண்டுகளில், வடதமிழ்நாடு கல்வியிலும், சுகாதாரத்திலும், தனிநபர் வருமானத்திலும், மனித வளர்ச்சி குறியீட்டிலும் மிக, மிக பின்தங்கிய நிலையில் உள்ளது. அதேநேரத்தில், டாஸ்மாக் விற்பனையில் வட மாவட்டங்கள் தான் முன்னிலையில் உள்ளன. வட மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அதிகம் இல்லை.

வேலைவாய்ப்பு கிடையாது. இந்த பகுதிகளுக்கு சிறப்பு திட்டங்களை வழங்கி, தமிழ்நாட்டை வளர்ச்சி அடைய தமிழக அரசை வலியுறுத்தும் மாநாடாகவும் அமையும். மேலும், தெலங்கானா, பிஹார், கர்நாடகா, ஒரிசா, ஆந்திரா, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்கு ஏற்ப இட ஒதுக்கீடுகளை உயர்த்தி வழங்கியுள்ளனர்.

இதுதான் உண்மையான சமூக நீதி. அமைதியான முறையில் இந்த மாநாடு நடைபெற தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பட்டியல் இன சகோதரர்கள் உட்பட அனைத்து சமுதாய மக்களும், மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாடு யாருக்கும் எதிரானது கிடையாது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கானது. தமிழ்நாட்டில் யார், யார் மிகவும் பின்தங்கி இருக்கின்றனரோ, அவர்கள் அனைவரும் முன்னேறினால் தான், தமிழ்நாடு முன்னேறும். அதற்காகத்தான் இந்த மாநாடு என்றார்.

SCROLL FOR NEXT