சென்னை: இந்தியாவுக்கான ஹஜ் ஒதுக்கீட்டில் முந்தைய அளவை கொண்டுவந்து, முஸ்லிம்களின் பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்தாண்டுக்கான ஹஜ் புனிதப் பயணத்துக்கு ஆவலுடன் தயாராகி வரும் தமிழகம் உட்பட ஆயிரக்கணக்கான இந்திய முஸ்லிம்கள் மத்தியில் தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்த செய்தி மிகுந்த வருத்தத்தை உண்டாக்கி உள்ளது. இந்த அவசர மற்றும் கவலையளிக்கும் விஷயத்தை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
ஹஜ் என்பது இஸ்லாத்தின் 5 கடமைகளாகக் கருதப்படும் தூண்களில் ஒன்றாகும். இது முஸ்லிம்களுக்கு மிகவும் புனிதமான மற்றும் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே மேற்கொள்ளும் மதக் கடமையாகும். ஆன்மிக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ள இந்தப் புனிதப் பயணத்தை மேற்கொள்ள முஸ்லிம்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பை செலவு செய்கின்றனர்.
இந்த ஆண்டு, ஹஜ் பயணம் வரும் ஜூன் 4-ம் தேதி முதல் ஜூன் 9-ம் தேதி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவிலிருந்து பயணிகள் வழக்கமாக இந்தாண்டு மே மாதத்தில் சவுதி அரேபியாவுக்கு தங்கள் பயணத்தைத் தொடங்குவார்கள்.
கடந்த ஆண்டில், சுமார் 1.75 லட்சம் இந்திய ஹஜ் பயணிகள் புனிதப் பயணத்தில் பங்கேற்றனர். இந்தாண்டு ஜனவரி மாதம் இந்தியா சவுதி அரேபியாவுடன் இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, இந்தாண்டுக்கான 1 லட்சத்து 75,025 ஹஜ் பயணிகளுக்கான ஒதுக்கீட்டை இறுதி செய்தது.
இந்த ஒதுக்கீடு 70-க்கு 30 என்ற விகிதத்தில் மாநில ஹஜ் கமிட்டிகள் மற்றும் தனியார் ஹஜ் சுற்றுலா ஏற்பாட்டாளர்களிடையே பிரிக்கப்பட்டது. அதன்படி, 2025-ம் ஆண்டுக்கான மாநில ஹஜ் குழுக்களுக்கு 1 லட்சத்து 22,517 இடங்களும் தனியார் ஹஜ் சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கு 52,507 இடங்களும் ஒதுக்கப்பட்டன.
இந்நிலையில், சவுதி அரேபியா திடீரென இந்தியாவுக்கான ஹஜ் ஒதுக்கீட்டை குறைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. அதன் காரணமாக தனியார் ஹஜ் சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 52 ஆயிரம் ஹஜ் இடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த திடீர் முடிவு ஏற்கெனவே பணம் செலுத்தியுள்ள பல ஹஜ் பயணிகளை ஆழ்ந்த கவலையிலும் நிச்சயமற்ற நிலையிலும் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலைமையின் தன்மையைக் கருத்தில் கொண்டு, இப்பிரச்சினையை அவசரமாக சவூதி அரேபிய அரசிடம் எடுத்துச்சென்று விரைவான தீர்வைப் பெற வேண்டும். தாங்களின் தலையீடானது, ஹஜ் ஒதுக்கீட்டில் முந்தைய அளவினை மீண்டும் கொண்டுவந்து, ஹஜ் பயணிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஹஜ் பயணத்தை மேற்கொள்வதற்கான உறுதியை அளிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.