தமிழ்ப் புத்தாண்டையொட்டி வடபழநி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள். | படங்கள்: எஸ்.சத்தியசீலன் | 
தமிழகம்

சென்னை, புறநகரில் தமிழ் புத்தாண்டு கோலாகலம்: கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

செய்திப்பிரிவு

சென்னை: சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டையொட்டி, சென்னை, புறநகர் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். கடற்கரை, பூங்கா, திரையரங்குகளிலும் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 1-ம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. அந்தவகையில் நேற்று தமிழ் புத்தாண்டு உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டது. தமிழ் புத்தாண்டையொட்டி சென்னை மற்றும் புறநகரில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, கோயில்களில் சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறிப்பாக, வடபழனி முருகன் கோயிலில் நேற்று காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு பள்ளியறை பூஜை நடைபெற்றது. இதையடுத்து, காலை 5 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பின்னர், 11 மணிக்கு முருகப் பெருமானுக்கு பாலாபிஷேகம் நடந்தது. மாலை அபிஷேகம் முடிந்ததும் புஷ்ப அங்கி சார்த்தப்பட்டது. இரவு 10.30 மணி வரை பக்தர்கள் முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.

தமிழ் புத்தாண்டையொட்டி ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருவார்கள் என்பதால், வடபழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்காக பல்வேறு ஏற்பாடுகள் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. கோயிலில் நாள் முழுதும் பிரசாரதம் வழங்கப்பட்டது. மேலும், பக்தர்கள் வசதிக்காக கோடை வெயிலை சமாளிக்கும் வகையில், 600 அடி தூரத்துக்கு பந்தல் போடப்பட்டு, காலை முதல் மாலை வரை குளிர்ந்த நீர், மோர் வழங்கப்பட்டது.

இதேபோல், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், தியாகராய நகர் திருமலை திருப்பதி தேவஸ்தானம், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில், பிராட்வே காளிகாம்பாள் கோயில், மற்றும் கந்தகோட்டம், திருநீர்மலை, திருவேற்காடு, மாங்காடு, குன்றத்தூர், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட கோயில்களில் நேற்று அதிகாலையில் இருந்தே சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

மேலும், தமிழ் புத்தாண்டு விடுமுறை நாளான நேற்று, சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர், நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரைகளில் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். இதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பூங்காக்கள், திரையரங்குகளிலும் புத்தாண்டையொட்டி பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

SCROLL FOR NEXT