தமிழகம்

மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்த கலைஞர் பெயரில் அறக்கட்டளை: அரசாணை வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை: மருத்துவ ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்காக, கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த ஆராய்ச்சி அறக்கட்டளை அமைப்பதற்கான அரசாணையை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்ககத்தின் கீழ் இந்த அறக்கட்டளை செயல்படும். மாநில மருத்துவக் கல்வி இயக்குநர் அதன் தலைவராகவும், இணை இயக்குநர் துணை தலைவராகவும் செயல்படுவார்கள்.

மருத்துவக் கல்லூரி டீன்கள், மருத்துவமனை இயக்குநர்கள் நிலையிலான 4 மருத்துவர்கள், பேராசிரியர் நிலையிலான 4 மருத்துவர்கள், குடும்ப நலத்துறை துணை செயலர் நிலையில் ஒருவர் மற்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநரகம், சென்னை ஐஐடி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் தலா ஒரு பிரதிநிதி ஆகியோர் அறக்கட்டளை உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.

மாநிலத்தில் மருத்துவ ஆராய்ச்சி நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளிலும், மேம்படுத்தும் பணிகளிலும் அறக்கட்டளை செயல்படும். ஆராய்ச்சி திட்டங்களுக்கான விண்ணப்பங்களை கோரி, அவற்றை மதிப்பீடு செய்யும்.

கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இதுதொடர்பான அறிவிப்பை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட நிலையில், அதை செயல்படுத்தும் வகையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT