புதுச்சேரி: “வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸை, பாஜக விழுங்கிவிடும். என்.ஆர்.காங்கிரஸ் காணாமல் போய்விடும். தமிழகத்தில் அதிமுக உடைக்கப்படும், பலவீனமாக்கப்படும். புதுச்சேரியிலும் அதிமுக பலவீனமாக்கப்படும். பாஜக பிரதான எதிர்கட்சியாக வர வேண்டும் என்று வேலை செய்கிறது” என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு சார்பில் வக்பு வாரிய புதிய சட்டத் திருத்தத்தைக் கண்டித்து அண்ணா சிலை அருகே இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை உறுதி செய்திருக்கிறார். எந்த காலத்திலேயேயும் பாஜகவுடன் கூட்டணி சேர மாட்டோம் என்று எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து பலமுறை கூறினார்.
அதுமட்டுமின்றி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பாஜகவை விட்டு வெளியே வரும் சமயத்தில் பாஜகவுடன் இனி எப்போதும் அதிமுக சேராது என்றார். ஆனால் இப்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு அழுத்தம் கொடுத்து பாஜகவோடு கூட்டணியை அமித் ஷா சேர்த்துள்ளார். இது சந்தர்ப்பவாத கூட்டணி. மக்கள் விரோத கூட்டணி. இதனால் தமிழக மக்களுக்கு எந்தவித பலனும் கிடையாது. இது தோல்வி கூட்டணி. மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக தமிழக மக்களை வஞ்சிக்கிறது. தமிழக மக்களுக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கவில்லை.
இந்தியை திணிக்கிறது. மும்மொழி கொள்கையை கொண்டு வருகிறது. தொகுதி மறுவரையறை என்று சொல்லி தொகுதிகளை குறைக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக தமிழகத்துக்கு மிகப்பெரிய அநீதியை இவர்கள் செய்கிறார்கள். புதுச்சேரியை பொருத்தவரையில் ஏற்கெனவே இந்த கூட்டணி 2021-ல் இருந்து இருக்கிறது. சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. ஆனால் பாஜக பணபலத்தால் ஆட்சியை, அதிகாரத்தை கைப்பற்றி இப்போது ஆட்சியில் இருக்கிறார்கள்.
வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸை, பாஜக விழுங்கிவிடும். என்.ஆர்.காங்கிரஸ் காணாமல் போய்விடும். தமிழகத்தில் அதிமுக உடைக்கப்படும், பலவீனமாக்கப்படும். புதுச்சேரியிலும் அதிமுக பலவீனமாக்கப்படும். பாஜக பிரதான எதிர்கட்சியாக வர வேண்டும் என்று வேலை செய்கிறது. அந்த கனவு பலிக்காது. தமிழகம், புதுச்சேரியில் பாஜகவை மக்கள் புறக்கணித்திருக்கிறார்கள். அது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தெளிவாக தெரிந்தது.
ஆகவே அதிமுக-பாஜக கூட்டணி கண்டிப்பாக படுதோல்வி அடையும். எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து ஆட்சியை முடக்க முயற்சிக்கின்றனர். பாஜகவை தமிழகத்தில் மக்கள் வேரூன்ற விடமாட்டார்கள். 2026-ல் புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக ஆட்சியை பிடிக்கும். பிரதமர் நரேந்திர மோடியை பொருத்தவரை அவர் எதுவேண்டுமானாலும் சொல்லுவார். அவர் சொல்வதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. அண்ணாமலை பாஜகவை சற்று மேலே கொண்டு வந்தார். அவரை அழித்துவிட்டார்கள். பாஜவுக்கு விசுவாசியாக இருப்பவர்களை காலி செய்வது தான் அக்கட்சியின் வேலை,” என்று அவர் கூறினார்.