சிவகங்கை: நாட்டரசன்கோட்டையில் கம்பனின் பங்குனி அத்தத் திருநாள் விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் கம்ப ராமாயணம் இயற்றிய கவிச்சக்கரவர்த்தி கம்பன் அருட்கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி அத்த திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, காரைக்குடி கம்பன் அறநிலை, நாட்டரசன்கோட்டை கம்பன் அறநிலை இணைந்து பங்குனி அத்த திருவிழாவை நடத்தின. சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். கம்பரை தாமரை மலர்களை வைத்து பிரார்த்தனை செய்தார்.
பின்னர் கம்பராமாய பாராயணம் நிகழ்ச்சியை கண்டு ரசித்தார். மாணவிகளுடன் செல்பி எடுத்து கொண்டார். தொடர்ந்து பாஜகவினர் உள்ளிட்டோர் ஆளுநருக்கு நினைவுபரிசு, பொன்னாடை வழங்கினர். முன்னதாக விழா குழுவினர் ஆளுநரை கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். மேலும் சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.