தமிழகம்

ரிச்சர்ட் அட்டன்பரோ மறைவுக்கு கருணாநிதி இரங்கல்

செய்திப்பிரிவு

'காந்தி' திரைப்பட புகழ் இயக்குநரும், நடிகருமான ரிச்சர்ட் அட்டன்பரோ மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்: "இந்திய தேசத்தின் தந்தை" என்று அழைக்கப்பட்ட அண்ணல் காந்தியடிகள் பற்றிய திரைப் படத்தை 'காந்தி' என்ற பெயரில் தயாரித்து வெளியிட்டு, உலகம் முழுவதும் காந்தியின் புகழைப் பரப்பிய, அந்தப் படத்தின் இயக்குநர் ரிச்சர்ட் அட்டன்பரோ தனது 90-வது வயதில் மறைந்து விட்டார்.

'காந்தி'யின் வரலாற்றை இருபதாண்டு காலம் உழைத்து திரைப்படமாகத் தயாரித்ததின் மூலமாக அட்டன்பரோ இந்தியாவில் மட்டுமல்ல; வெளிநாடுகளிலும் பிரபலமடைந்தார்.

முல்லைப்பெரியாறு அணையைக் கட்டுவதற்காக, இங்கிலாந்தில் இருந்த தன்னுடைய சொந்த வீட்டை விற்றுச் செலவழித்த பென்னி குவிக்கைப் போலவே, மறைந்த ரிச்சர்ட் அட்டன்பரோ, லண்டனில் இருந்த தன்னுடைய சொந்த வீட்டை அடகு வைத்தும், தான் அரும்பாடுபட்டு சேகரித்து வைத்திருந்த அரிய கலைப் பொருள்களையெல்லாம் விற்றும், அந்தத் தொகையிலிருந்து 'காந்தி' திரைப்படத்தைத் தயாரித்தார் என்பது நம்மால் மறக்க முடியாத வரலாறு.

இதுவரை எந்த ஆங்கிலத் திரைப்படமும் பெற்றிராத அளவுக்கு எட்டு ஆஸ்கார் விருதுகளை, குறிப்பாக சிறந்த இயக்குனர் அட்டன்பரோ என்ற அளவுக்குப் பெற்ற திரைப்படம் 'காந்தி'.

'காந்தி' திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பு, அட்டன்பரோ பல திரைப்படங்களை இயக்கி, நடித்ததெல்லாம், 'காந்தி' படத்தை இந்த அளவுக்குச் சிறப்பாகத் தயாரிப்பதற்கான பயிற்சியாக அமைந்தது என்று அவரே தெரிவித்திருக்கிறார்.

மிகப் பெரிய ராணுவ பலம் மிக்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தன்னுடைய அகிம்சை, ஒத்துழையாமை ஆகிய அணுகுமுறைகளின் மூலம் இந்தியத் திருநாட்டுக்கு விடுதலைப் பெற்றுத் தந்த காந்தியடிகளின் அழியாப் புகழை அகிலமெங்கும் திரைப்படத்தின் மூலம் எடுத்துச் சென்று புதிய விழிப்புணர்வை ஏற்படுத்திய ரிச்சர்ட் அட்டன்பரோ மறைவுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், என் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு கருணாநிதி தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.

SCROLL FOR NEXT