சென்னை: பொது நூலக இயக்ககம் சார்பில் ரூ.84.76 கோடியில் கட்டப்பட்ட 326 நூலகக் கட்டிடங்கள் மற்றும் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.32.64 கோடியில் கட்டப்பட்ட வகுப்பறைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று திறந்துவைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் 821 பொது நூலகங்களுக்கு கூடுதல் கட்டிடம், தளவாடங்கள், கணினி தொடர்புடைய சாதனங்கள் மற்றும் புத்தகங்கள் வாங்குதல் போன்றவற்றுக்கு சிறப்பு நிதியாக ரூ.213.46 கோடி அனுமதிக்கப்பட்டது. இதில் ஒரு நூலகக் கட்டிடம் 500 சதுர அடி என்ற அளவில், 821 நூலகங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் வழியாக புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
தற்பொழுது ஊரக வளர்ச்சித் துறை மூலம் 246 நூலகங்கள், பேரூராட்சிகள் இயக்ககம் மூலம் 44 நூலகங்கள், நகராட்சி நிர்வாகத் துறை மூலம் 28 நூலகங்கள், சென்னை மாநகராட்சி மூலம் 8 நூலகங்களில் ரூ.71.72 கோடி செலவில் கட்டிடங்கள், ரூ.6.52 கோடியில் நூல்கள், ரூ.4.73 கோடியில் மேஜைகள், நாற்காலிகள், ரூ. 1.79 கோடியில் கணினி தொடர்புடைய சாதனங்கள் என ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.1,014 கோடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 3148 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருப்பத்தூர், தருமபுரி, திருவாரூர் மாவட்டங்களில் 100 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ரூ.32.84 கோடியில் கட்டப்பட்டுள்ள 199 வகுப்பறைக் கட்டிடங்களையும் முதல்வர் திறந்தார்.
இந்நிகழ்வில், அமைச்சர்கள் அன்பில் மகேஸ், சி.வி. கணேசன், டி.ஆர்.பி. ராஜா, ஊரகவளர்ச்சித் துறைச் செயலர் ககன்தீப்சிங் பேடி, பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன், பொதுநூலகத் துறை இயக்குநர் பொ.சங்கர், ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் பா.பொன்னையா, தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழகத்தில் உள்ள 21 கோயில்களில் காணிக்கை மூலம் கிடைத்த 1,074 கிலோ தங்கத்தை வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
1,074 கிலோ தங்கம் முதலீடு: இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள 21 கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்றுப் பொன் இனங்களில் கோயிலுக்கு பயன்பாடு இல்லாத பொன் இனங்களை உருக்கியதன் மூலம் 1,074 கிலோ 123 கிராம் 488 மில்லிகிராம் சுத்த தங்க கட்டிகள் கிடைத்தன. இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அந்த தங்க கட்டிகள், பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளன.
அதற்கான அடையாளமாக திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன், திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி, கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் ஆகிய கோயில்களின் நிர்வாகிகளிடம் தங்க முதலீட்டுக்கான பத்திரங்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கினார். அந்த கோயில்களின் அறங்காவலர் குழு தலைவர்கள் பெற்றுக் கொண்டனர்.