புதுச்சேரி: பயனாளிகள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவதில் பல துறைகளில் முறைகேடு நடந்துள்ளதால் அதில் ஈடுபட்டோரை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முதல்வரை அதிமுக வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று தலைமைக் கழகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையில் யுடிசியாக பணிபுரிந்த ஒரு நபர் ரூ.65 லட்சத்துக்கு மேல் மக்களுக்கு சேர வேண்டிய பணத்தை வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்துள்ளதாக வெகு நாட்களுக்கு பிறகு தெரியவந்துள்ளது.
ஒரு பெண் குழந்தை பிறந்தால் ரூ.20,000, இரண்டு பெண்குழந்தைகள் பிறந்தால் ரூ.30,000 என வங்கியில் செலுத்த வேண்டிய வைப்புத் தொகையை பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தாமல் பல ஆண்டுகளாக ஏமாற்றியுள்ளார். இவ்வாறு இவர் ஏமாற்றியுள்ளதற்கு அந்த துறையில் மாதந்தோறும் அனைத்து திட்டங்களுக்கும் செலுத்தப்படும் நிதியுதவிகள் சம்பந்தமாக ஆடிட் செய்யப்படாதது முதல் காரணமாகும்.
இந்த குற்றச்செயலை ஒரு தனி நபரால் இவ்வாறு செய்யமுடியாது. இந்த குற்றச்செயல் செய்ய எல்.டி.சி, யு.டி.சி, அசிஸ்டெண்ட், சூப்பிரண்டு, ஏ.டி., டி.டி., இயக்குநர் மற்றும் கேஷியர் உள்ளிட்ட யாராவது ஒருவர் இந்த முறைகேட்டிற்கு துணைநிற்காமல் இருந்தாலே, இதை தடுத்திருக்க முடியும். ஆனால் இந்த முறைகேட்டை தடுக்க தவறிய இத்தனை பொறுப்புகள் வகிக்கும் அத்தனை பேரும் குற்றவாளிகள் தான் என்பதை அரசு உணராமல் அந்த தனி நபர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்து முறைகேட்டை மூடி மறைக்க அரசு முயலுகிறது.
புதுச்சேரி அரசில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை, வருவாய் துறை, மீனவர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகளும், நலத்திட்ட உதவிகளுக்கான ரொக்க பணமும் வங்கி மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. அதே போன்று மழைக்கால நிவாரண உதவிகள், புயல் நிவாரண உதவிகள் போன்று பல்வேறு நிவாரண உதவிகள் அரசால் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு அதற்குரிய பணங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படுகின்றன.
உங்கள் பணம் உங்கள் கையில் என்ற திட்டத்தின் அடிப்படையில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட நலத்திட்ட உதவிகளுக்குரிய பொருட்களுக்கு பதிலாக நேரடியாக பணமாக ஒவ்வொரு துறையும் வங்கி மூலம் மக்களுக்கு செலுத்துகின்றன. இவ்வாறு வங்கி மூலம் மக்களுக்கு பணமாக செலுத்துவது பல்வேறு முறைகேடுகளும், ஊழல்களும், ஏமாற்றுதலும் ஒருசில அதிகாரிகளால் நடத்தப்படுகின்றன. குறிப்பாக இதில் கிராமப்புறத்தில் உள்ள அப்பாவி மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.
பல்வேறு திட்டங்களுக்கு பல்வேறு துறைகள் மூலம் வங்கிகள் மூலம் செலுத்தப்படும் வைப்பு நிதிகள் மற்றும் உதவித்தொகைகளில் பல கோடி கணக்கில் முறைகேடுகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த முறைகேட்டை தடுத்து நிறுத்தவும், குற்றம் புரிந்துள்ள அனைத்து அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கின்ற விதத்தில் ஒட்டுமொத்தமாக சிபிஐ விசாரணைக்கு ஆளுநரும், முதல்வரும் உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.