தமிழகம்

ஜனநாயகம், கூட்டாட்சியை காக்க திமுகவின் போராட்டம் தொடரும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: நீதியின் வாயிலாக நாட்டின் ஜனநாயகம், கூட்டாட்சி தன்மையையும் காக்கும் திமுகவின் போராட்டம் தொடரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சட்டப் போராட்டம் வழியாக திமுகவும், அதன் தலைமையிலான அரசும் பெற்றுத் தரும் தீர்ப்புகள், தமிழக நலனுக்கு மட்டுமின்றி, நாட்டின் ஒட்டுமொத்த ஜனநாயகத்துக்கும் வெளிச்சம் பாய்ச்சும் என்பதுதான் வரலாறு. ஆளுநரின் அதிகார அத்துமீறல்களை ரத்து செய்து, மாநில உரிமைகளை காக்கும் மகத்தான தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் வழங்கி இருப்பது வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படக்கூடியது.

இருமொழி கொள்கையை கடைபிடிக்கும் தமிழகத்தில் இந்தி ஆதிக்கத்துக்கு இடமில்லை என்பதில் உறுதியாக நின்று, தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை மத்திய அரசு மறுத்தாலும், மாநில நிதியில் இருந்தே கல்விச் செலவுகளை எதிர்கொள்ளும் வலிமை உண்டு என்பதை கூறியுள்ளோம். அதேபோல, தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களை ஒருங்கிணைத்து, தற்போதுள்ள விகிதாச்சாரம் தொடர வேண்டும், மறுவரையறையை தள்ளிவைக்க வேண்டும் என்று திமுக அரசு வலியுறுத்தியுள்ளது.

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளதையும், ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி, 100 நாள் வேலை திட்டத்தின் மத்திய பங்கு வழங்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியதுடன், மணிப்பூர் கலவரம், வக்பு திருத்த சட்ட மசோதா, பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மாணவர்களுக்கான உதவித் தொகை என நாட்டின் அமைதி, வளர்ச்சிக்குமான குரலாக திமுகவினரின் குரல் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்தது.

தமிழகத்தின் 39 மக்களவை தொகுதி எம்.பி.க்களும், மாநிலங்களவையில் உள்ள திமுக எம்.பி.க்களும் இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் முழுவதையும் தன்வசப்படுத்தி, மாநில நலனை மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவின் நம்பிக்கை குரலாக ஒலித்தனர்.

தமிழக பட்ஜெட் அறிவிப்புகள் தமிழகத்தில் வாழும் அனைத்து மக்களின் நலன்களையும் உள்ளடக்கியதாகவும் பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வாழ்க்கை மேம்பாட்டை மையப்படுத்தியும் அமைந்துள்ளன. 2024-25-ம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சியில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் 9.69 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து நிற்பதும், பெண்கள் பங்கேற்புடனான வேலைவாய்ப்புகள் பெருகியிருப்பதும் மத்திய அரசின் புள்ளிவிவரம் மூலமாகவே வெளிப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சியை அடையவும், தொடரவும்தான் மாநில உரிமைகளுக்கான நமது போராட்டம் தொடர்ந்து வருகிறது.

அதில் ஒரு மைல்கல்லாக கடந்த ஏப்ரல் 8-ம் தேதி வெளியான மகத்தான தீர்ப்பு அமைந்துள்ளது. பல்கலைக்கழக வேந்தர் என்ற அதிகாரத்தை கொண்டிருந்த ஆளுநர், உயர்கல்வியில் அறமற்ற அரசியலை புகுத்தி, காவி சாயம் பூசிக்கொண்டிருப்பதற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றுக்கு ஒப்புதல் தராததை எதிர்த்து அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில், ‘தமிழக ஆளுநரின் செயல்பாடு சட்டவிரோதமானது, சட்டப்பேரவையில் நிறைவேற்றும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் வேலை’ என்று நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் அமர்வு கடந்த ஏப்ரல் 8-ம் தேதி தெளிவாக தீர்ப்பளித்துள்ளது. சட்டப்பேரவைதான் வலிமையானது, ராஜ்பவனுக்கு அதிகாரம் இல்லை. ஆளுநர் பதவி என்பது மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான தபால்காரர் பணிதான் என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் தெளிவாகியுள்ளது.

இதனால், தங்கள் மாநிலங்களில் ஆளுநரின் அத்துமீறல்களால் ஜனநாயகத்தை காக்க போராடும் மற்ற மாநில அரசுகளும் இந்த தீர்ப்பை முன்மாதிரியாக வைத்து, தங்களது வழக்குகளை முன்னெடுத்துச் செல்லும் நிலை உருவாகியுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கான அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி நடந்தது. சமூகநீதிக்கும், மாணவர்களுக்கும், மக்களுக்கும் எதிரான பாஜகவினர் இதில் பங்கேற்கவில்லை என்றதும், அவர்களது வழியில் முதன்மை எதிர்க்கட்சியான அதிமுகவினரும் புறக்கணித்து தங்கள் எஜமான விசுவாசத்தை வெளிப்படுத்தினர்.

மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடியான திமுக, நீட் தேர்விலும் விலக்கு பெறும் வகையில் தமிழகத்தின் தனித்தன்மையை சட்டப் போராட்டத்தின் வழியே முன்னெடுக்கத் தீர்மானித்து, ஆதரவு சக்திகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. நீதியின் வாயிலாக இந்தியாவின் ஜனநாயகத்தையும், கூட்டாட்சி தன்மையையும் காக்கும் பேரியக்கமாக திமுக தனது போராட்டத்தை தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT