தமிழகம்

நிராகரிக்கப்பட்ட உயர் பென்ஷன் குறித்த விண்ணப்பங்களை மறுபரிசீலனை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: நிராகரிக்கப்பட்ட உயர் பென்ஷன் தொடர்பான விண்ணப்பங்களை வருங்கால வைப்புநிதி நிறுவனம் மறுபரிசீலனை செய்யக் கோரி, சென்னை ராயப்பேட்டை வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகத்தில் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கத்தினர் உட்பட பல்வேறு தரப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் என பல்வேறு தரப்பில் இருந்து 750 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து, வருங்கால வைப்பு நிதி நிறுவனம் ஆணையருக்கு கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அதில், அச்சங்கத்தில் பொதுச் செயலாளர் டி.விஸ்வநாதன் கூறியுள்ளதாவது: உச்ச நீதிமன்றம் 2022-ம் ஆண்டு நவ.4-ம் தேதியிட்ட உத்தரவின்படி, இபிஎஸ்-95 திட்டத்தின் கீழ், ஓய்வுபெற்ற பல்வேறு ஊழியர்கள் உயர் பென்ஷன் பெறுவதற்கு சட்டப்பூர்வமாக தகுதி உடையவர்கள் ஆவார்கள். இந்த உத்தரவை மேற்கொண்டு எங்கள் ஊழியர்களும், தமிழக கைத்தறி நெசவாளர் கூட்டுறவு நெசவாளர் சங்க நிர்வாகமும் இணைந்த விருப்ப மனுவை முறையான காலக்கெடுவில் சமர்ப்பித்துள்ளனர்.

பி.எப். அலுவலகம் இந்த விண்ணப்பங்களை பெற்றதை உறுதிப்படுத்தியிருந்தாலும், எங்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் எந்தவித சரியான காரணமும் இல்லாமல் சுமார் 279 விண்ணப்பங்களை நிராகரித்துள்ளது. இந்த நிராகரிப்பு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஊழியர்கள் தங்கள் விண்ணப்பங்களையும், தேவையான ஆவணங்களையும் சரியான நேரத்தில் சமர்ப்பித்துள்ளனர். பி.எப். நிறுவன அதிகாரிகள் எந்தவித நேர கால நிர்ணயத்தையும் உறுப்பினர்களுக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்து, தகவல்களை முறைப்படி தெரிவிக்கவில்லை. விண்ணப்பங்களை நிராகரித்தது உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிரானது. இதனால், ஓய்வுபெற்ற ஊழியர்கள் அவர்களின் உரிமையான நலன்களை இழக்கின்றனர்,

எனவே, இந்த விஷயம் அவசரமானது என்பதுடன், ஓய்வுபெற்ற ஊழியர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். எனவே, அவர்களின் உயர் ஓய்வூதிய விண்ணப்பங்களை மேலும் தாமதமின்றி மறுபரிசீலனை செய்து அனுமதிக்க உங்களது உடனடி தலையீட்டை வேண்டுகிறேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT