தமிழகம்

தமிழக பாஜக தலை​வர் தேர்வு விவ​காரம்: நயி​னார் நாகேந்திரன் டெல்​லி​யில் முகாம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக பாஜக தலைவருக்கான தேடல் தீவிரமாகி வரும் நிலையில், பாஜக சட்டப்பேரவை குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லியில் முகாமிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தின் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக அதிமுகவுடன் கூட்டணியையும் உறுதி செய்வதற்கான நடவடிக்கையும் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையே, தமிழக பாஜகவில் அமைப்பு ரீதியான தேர்தல் இறுதி கட்டத்தை எட்டி வரும் நிலையில், அடுத்த மாநிலத் தலைவர் யார் என்ற கேள்விக்கு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளை மத்திய அமைச்சர் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் டெல்லிக்கு வரவழைத்து கருத்துகளை கேட்டறிந்தனர். இதற்கான போட்டியில் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட பலர் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது நயினார் நாகேந்திரன் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் பாம்பன் பாலத் திறப்பு விழாவுக்கு பிரதமர் வருகை தந்தபோது, நயினாருக்கு மேடையில் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. அது அரசு விழா என்பதால் தான் பங்கேற்கவில்லை என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமளித்திருந்தார். இந்நிலையில், சட்டப்பேரவை நடந்து கொண்டிருக்கும் சூழலில் நயினார் நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டுச் சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் தற்போது டெல்லியில் முகாமிட்டிருக்கிறார். விரைவில் மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரை சந்தித்து பேசவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து டெல்லி தலைமையின் முடிவின் அடிப்படையில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகலாம் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT