சென்னை: சுயசான்றிதழ் மூலம் தூண் தளம் மற்றும் இரண்டு தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று பேரவையில் வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அறிவித்தார்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் 2024-ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டு விற்பனையாகாத குறைந்த வருவாய் பிரிவு குடியிருப்புகள் தவணை முறை திட்டத்தின்கீழ் விற்கப்படும் எனவும் அமைச்சர் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்த வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதன் விவரம்:
ஒற்றைச்சாளர முறையில் கட்டிட அனுமதி வழங்குவதை எளிமைப்படுத்தி, இணையதளத்தில் பதிவு செய்து சுயசான்றிதழ் மூலம் தரைத்தளம் மற்றும் முதல் தளம் (Ground + 1 Floor) கொண்ட கட்டிடத்தக்கு உடனடியாக அனுமதி பெறுவதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து வாகனம் நிறுத்துவதற்கான சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தூண் தளம் மற்றும் இரண்டு தளங்கள் (Stilt + 2 Floors) கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கும் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்து உடனடியாக கட்டிட அனுமதி பெறுவதற்கு கூடுதல் வசதி அறிமுகப்படுத்தப்படும்.
குடிசை தொழில் மற்றும் பசுமை வகை தொழிற்சாலை கட்டிடங்களுக்கு உடனடி அனுமதி பெறும் சுயசான்றிதழ் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். 2016-ம் ஆண்டு அக்.20-ம் தேதிக்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், மேற்கண்ட தேதிக்கு முன்பதிவு செய்யப்பட்ட தனி மனைகளுக்கு எந்தக் காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து தரப்படும்.
ஒற்றை குடியிருப்பு கொண்ட தனி வீட்டுக்கு வாகன நிறுத்துமிடத்துக்கென தனி விதிகள் உருவாக்கப்படும். திட்ட ஒப்புதல் வழங்கும் நடைமுறையில் பொதுமக்களுக்கு உதவி புரிய தற்போது செயல்பாட்டில் உள்ள ஒற்றை சாளர முறையில் மின்னணு உதவி செயலி உருவாக்கப்படும்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் திருவள்ளூர் மாவட்டம், திரூரில் 1.97 ஏக்கர் பரப்பளவில் மனை மேம்பாட்டுத் திட்டம் ரூ.2.06 கோடியில் செயல்படுத்தப்படும். திருவள்ளூர் மாவட்டம், காக்களூரில் 1.05 ஏக்கரில் 80 லட்சத்திலும், சேலம் மாவட்டம், எடப்பாடியில் 8.19 ஏக்கரில் ரூ.9.13 கோடியிலும் மனை மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். ஈரோடு மாவட்டம், தாளவாடியில் தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்காக முதல்கட்டமாக 100 வாடகை குடியிருப்புகள் ரூ.65 கோடியில் கட்டப்படும்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் 2024-ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டு விற்பனையாகாத குறைந்த வருவாய் பிரிவு குடியிருப்புகள் தவணை முறை திட்டத்தின்கீழ் விற்கப்படும். சென்னை, செங்கல்பட்டு, கோவை, மதுரை, நெல்லை, சேலம் ஆகிய மண்டலங்களில் உள்ள 8 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் நகைக்கடன் வழங்கப்படும். அங்கு பாதுகாப்பு அறையுடன்கூடிய இரும்பு பெட்டகங்கள் நிறுவப்படும்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் 2015-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்கு முன்பு தவணை காலம் முடிவுற்ற குடியிருப்புத் திட்டங்களுக்கு மாதத் தவணை தொகையை தாமதமாக செலுத்தியதற்காக விதிக்கப்படும் அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். வட்டி முதலாக்கத்தின்மீது விதிக்கப்படும் வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். இ்வ்வாறு அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.