ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.727 கோடி மதிப்பில் 1,703 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், 56 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 15,634 பயனாளிகளுக்கு ரூ.102 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று கோயம்புத்தூரிலிருந்து சாலை மார்க்கமாக உதகை நோக்கிச் சென்ற தமிழக முதல்வர் மு.க.,ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் மாணவ, மாணவியர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, முதலவர் நீலகிரி மாவட்ட பழங்குடியின மக்கள், சிறுவர், சிறுமியர்களிடம் உரையாடினார். அதனைத் தொடர்ந்து, குஞ்சப்பனையில் கடந்த மழையின்போது நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சரிவு தளம் திடப்படுத்தும் பணிகளையும் மற்றும் கேபியான் சுவர் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர், நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு உயர் அலுவர்களுடன் நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதல்வர் நீலகிரி மாவட்டம், ஊட்டியில் ரூ.143.69 கோடி செலவில் 700 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்தார். பின்னர், ஊட்டி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.494 கோடியே 51 லட்சம் செலவில் 1,703 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.130 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டிலான 56 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.102 கோடியே 17 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 15,634 பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்த விழாவில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன், நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ. ராசா, ஊட்டி எம்எல்ஏ ஆர்.கணேஷ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், பொதுப்பணித் துறை செயலாளர் ஜெ. ஜெயகாந்தன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.