புதுச்சேரி: “புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியர்களை பணிநீக்கம் செய்திருப்பது சர்வாதிகாரத்தின் உச்சக்கட்டம்” என்று அதிமுக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் இன்று (ஏப்.5) செய்தியாளர்களிடம் கூறியது: “உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி நாடாளுமன்றத்தில் உரிய சட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் நீட் தேர்வை உறுதி செய்திருந்தது. அதையும் எதிர்த்து நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தையே களங்கப்படுத்தும் விதத்தில், தான் ஆட்சி செய்யும் மாநில சட்டப்பேரவையில் நீட் தேர்வு ரத்து என கபடத்தனமான தீர்மானத்தை நிறைவேற்றி நாடாளுமன்றத்தையும் திமுக களங்கப்படுத்தி இருந்தது.
தற்போது திமுக அரசின் ஆட்சியில் தினந்தோறும் நடைபெறும் டாஸ்மாக் ஊழல் முறைகேட்டில் அமலாக்கத் துறை விசாரணையே தவறு என உயர் நீதிமன்றத்தில் வாதிட்டனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு தனது அரசின் கட்டுப்பாட்டில் வருவாய் சம்பந்தமாக இயங்கும் டாஸ்மாக்கில் நடைபெறும் ஊழலையும், முறைகேடுகளையும் மாநில திமுக அரசை கேட்காமல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என நீதிமன்றத்தில் வாதிடுகின்றனர். இது சம்பந்தமான தீர்ப்பு ஓரிரு தினங்களில் வர இருக்கிறது.
தற்போது இந்த வழக்கையே காலத்தை கடத்தி நீர்த்துப்போக செய்யும் விதத்தில் தமிழகத்துக்கு அப்பாற்பட்டு வேறு மாநில உயர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என திமுக அரசே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. தான் ஆட்சி செய்யம் ஒரு மாநிலத்தில் உயர் நீதிமன்றத்தையே அவமதிக்கும் விதத்தில் திமுக அரசு இப்பிரச்சினையை கொண்டு செல்கிறது. திமுகவின் பகட்டுத்தனமான இரட்டை வேடத்தை தமிழக, புதுச்சேரி மக்கள் நன்கு உணர்ந்து எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு சரியான பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ஏனாம் பிராந்தியத்தில் இரண்டு அரசியல்வாதிகளின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு காரணமாக கடந்த 2 மாதங்களாக குப்பை வாரப்படாமல் உள்ளது. இதனால் தொடர்ந்து துர்நாற்றம் வீசி வருவது மட்டுமல்லாமல் மக்கள் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இது சம்பந்தமாக மக்களின் நலன் கருதி அதிமுக முழு கதவடைப்பு பந்த் போராட்டத்தையும் நடத்தியது. ஆனால் அங்குள்ள இன்னாள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் இருவரும் அந்த பகுதியின் குருநில மன்னர்கள் போன்று குப்பையை வாராமல் தடுத்து வருகின்றனர்.
அங்குள்ள நிர்வாக அதிகாரி முனுசாமி அரசியல்வாதிகளின் தலையாட்டி பொம்மை போன்று செயல்பட்டு வருகிறார்.மக்களின் சுகாதாரம் சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்காத ஏனாம் மண்டல நிர்வாக அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கைகயை மாவட்ட ஆட்சியரும், தலைமை செயலாளரும் உடனடியாக எடுக்க வேண்டும்.
ஒப்பந்த ஆசிரியர் பிரச்சினையில் ஆளும் அரசு சட்டப் பேரவையில் பணி நிரந்தரம் செய்யப்படும் என ஒரு அறிவிப்பை வெளியிட்ட பிறகு அந்த ஒப்பந்த ஆசிரியர்களை பணிநீக்கம் செய்திருப்பது சர்வாதிகாரத்தின் உச்சகட்டமாகும்.
தேர்தல் நெருங்கி வரும் வேலையில் மக்களின் நம்பிக்கையை எந்த அரசாக இருந்தாலும் இழக்க கூடாது. இப்பிரச்சினையில் துணைநிலை ஆளுநர், முதல்வரை சந்தித்து யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் ஒப்பந்த ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்து துணைநிலை ஆளுநர் பேச முன்வர வேண்டும்,” என்று அவர் கூறினார்.