தமிழகம்

நிதி நிறுவன மோசடி வழக்​கில் கைதான தேவ​நாதன் சொத்து விவரங்​கள் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல்

செய்திப்பிரிவு

சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதன் யாதவின் சொத்து விவரங்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து போலீஸார் மற்றும் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாயை மோசடி செய்ததாக அந்நிதி நிறுவன இயக்குநரான தேவநாதன் யாதவ் உள்பட 6 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் தேவநாதன் யாதவ் மற்றும் குணசீலன் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு கடந்தமுறை நீதிபதி சுந்தர்மோகன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, 'இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், தேவநாதன் யாதவ் அரசியல் பின்புலம் மற்றும் பணபலம் கொண்டவர் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது' எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, தேவநாதன் யாதவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என போலீஸாருக்கு உத்தரவி்ட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி சுந்தர் மோகன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தேவநாதன் யாதவ் தரப்பில் அவரது சொத்து விவரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் போலீஸார் மற்றும் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்.9-க்கு தள்ளிவைத்துள்ளார்.

SCROLL FOR NEXT