பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ள ராமேசுவரம்-தாம்பரம் தினசரி பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலின் காலஅட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
ராமநவமி நாளான ஏப்ரல் 6-ம் தேதி பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதுடன், ராமேசுவரம்-தாம்பரம் இடையேயான பாம்பன் எக்ஸ்பிரஸ் தினசரி விரைவு ரயில் சேவையையும் தொடங்கிவைக்கிறார். இந்த ரயில் (எண் 16104) தினமும் பிற்பகல் 3.35 மணிக்கு ராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக அதிகாலை 3.10 மணியளவில் தாம்பரம் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் ரயில் (எண் 16104) தினமும் மாலை 6.05 மணியளவில் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைபூண்டி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக அதிகாலை 5.45 மணியளவில் ராமேசுவரம் வந்தடையும்.
பாம்பனில் நிற்க கோரிக்கை: புதிதாக இயக்கப்பட உள்ள பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் வரலாற்றுச் சிறப்புமிக்க பாம்பன் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்கிறது. ஆண்டுக்கு ரூ.55 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் பாம்பன் ரயில் நிலையத்தில் இந்த ரயில் நின்று செல்ல வேண்டும் என்று ராமேசுவரம் தீவு ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ராமேசுவரத்தில் நடைபெற உள்ள பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவையொட்டி சென்னை தாம்பரம், திருச்சி, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய இடங்களிலிருந்து மண்டபத்துக்கு 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த விழாவில் 6 ஆயிரம் ரயில்வே ஊழியா்கள் பங்கேற்க உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.