மதுரையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயன் உரையாற்றினார் 
தமிழகம்

“கூட்டாட்சி தத்துவத்துக்கு பெரும் அச்சுறுத்தல்!” - மதுரை மார்க்சிஸ்ட் மாநாட்டில் பினராயி விஜயன் பேச்சு

செய்திப்பிரிவு

மதுரை: “இந்தியாவில் கூட்டாட்சி தத்துவம், ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்” என கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் இன்று (ஏப்.3) நடைபெற்ற கூட்டாட்சி தத்துவம் குறித்த கருத்தரங்கில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியது: “மத்திய, மாநில அரசுகளில் ஒற்றுமை தொடர்பான சர்க்காரியா, பூஞ்சி குழுவின் பரிந்துரைகளில் பல நல்ல பரிந்துரைகள் இருந்தன. அந்த பரிந்துரைகள் எதுவும் அமல்படுத்தப்படவில்லை. கூட்டாட்சி தத்துவம் என்பது நிதி அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படைக் கட்டமைப்பு .

மத்திய அரசின் விளம்பரதாரர் போல் மாநில அரசு செயல்பட முடியாது. இது கூட்டாட்சி தத்துவத்துக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரானது. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மாநிலங்களுக்கு உரிய நியாயம் வழங்கப்படுவதில்லை. மத்திய அரசு பொது விதிகளை உருவாக்கினாலும் அதை சுமப்பது மாநில அரசுகள் தான். மத்திய அரசு தொடர்ச்சியாக மிகவும் வசதியானவர்களுக்கு சலுகைகள் வழங்கி வருகிறது.மத்திய அரசுக்கும் மாநில அரசுக்குமான உறவைப் பொறுத்தவரை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை அதிகரித்து வருகிறது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

மாநில அரசுகள் பெரும்பாலான விஷயங்களுக்கு உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. உயர் கல்வி மாநில அரசுகள் அதிக பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. சங்பரிவார் அமைப்புகள் உயர்கல்வி நிலையங்களில் தங்களது ஆதிக்கத்தை செலுத்த தொடங்குகின்றன. உயர் கல்வி அமைப்புகளுக்கு முறையான நிதி வழங்கப்படுவதில்லை. மாநில பல்கலைக்கழகங்களில் மாநில அரசோடு விவாதிக்காமல் துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். அதற்கு ஏற்ப யூஜிசி விதிமுறைகளை மாற்றியுள்ளனர். ஒரு நாடு, ஒரு தேர்தல் எனும் நடைமுறையை கொண்டுவர மத்திய அரசு சட்ட மசோதாக்களையும் நிறைவேற்றி வருகிறது.

நாட்டின் நலனை கருத்தில் கொண்டு மக்கள் தொகையை குறைத்த மாநிலங்கள், தற்போது மக்கள் தொகைக்கு ஏற்ப தொகுதிகளை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதனால் தங்களின் உரிமைகளை, தேவைகளை பெறுவதில் சிக்கல் எழும் நிலை உருவாகியுள்ளது. கூட்டாட்சி தத்துவம், ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். இது போன்ற மாநாடுகள் பொதுமக்களுக்கான புரிதலை அதிகப்படுத்தும் என நம்புகிறேன்” என்று அவர் பேசினார்.

- கி.மகாராஜன்/ என்.சன்னாசி

SCROLL FOR NEXT